/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிப்காட் சுத்திகரிப்பு நிலையத்துக்கு ரூ.56 கோடியில் டெண்டர்: அமைச்சர் முத்துசாமி
/
சிப்காட் சுத்திகரிப்பு நிலையத்துக்கு ரூ.56 கோடியில் டெண்டர்: அமைச்சர் முத்துசாமி
சிப்காட் சுத்திகரிப்பு நிலையத்துக்கு ரூ.56 கோடியில் டெண்டர்: அமைச்சர் முத்துசாமி
சிப்காட் சுத்திகரிப்பு நிலையத்துக்கு ரூ.56 கோடியில் டெண்டர்: அமைச்சர் முத்துசாமி
ADDED : டிச 18, 2024 07:15 AM
ஈரோடு: ''சிப்காட் சுத்திகரிப்பு நிலையத்துக்கு, ரூ.56 கோடியில் டெண்டர் விடப்படவுள்ளது,'' என, அமைச்சர் முத்துசாமி பேசினார்.
ஈரோட்டில், தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் ரத்தினசாமி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பேசியதாவது: மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ளதுபோல, டவுன் பஞ்.,களிலும் உழவர் சந்தையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேட்டூர் வலசு கரை வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, ஒழுங்கு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கீழ்பவானி வாய்க்கால் பாசன பகுதியில், 2,400 ஏக்கரில் சொட்டு நீர் பாசனம் முறை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 26 கசிவு நீர் திட்டம் மூலம், 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசனம் பெறும்படி, விரைவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
மலை கிராமங்கள், அதனை ஒட்டிய பகுதிக்குள் யானை, காட்டு பன்றி உள்ளிட்ட விலங்குகள் வருவதை தடுக்க, ரயில் தண்டவாளம் மூலம் வேலி அமைக்கப்படும். அல்லது கர்நாடகா மாநிலத்தில், சாதாரண வேலி வடிவிலான அமைப்பை உருவாக்கி சிறப்பாக செயல்படுவதாக அறிந்தோம். அவற்றை முதல்வரிடம் தெரிவித்து, விரைவில் இம்மாவட்டத்தில் ஏற்படுத்தப்படும். கீழ்பவானி வாய்க்காலை துார்வாரவும், கொப்பு வாய்க்கால்களை சீரமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பெருந்துறை சிப்காட் பிரச்னைகளுக்கு, தனித்தனியாக தீர்வு காணப்பட்டு வருகிறது.
அங்கு, டெக்ஸ்டைல் யூனிட்களுக்கு தனித்தனியாக பொதுக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுகிறது. பிற ஆலைகள், சொந்தமாக சுத்திகரிப்பு நிலையம் வைத்துள்ளதால், தனியாக ஏன் பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் தேவை என, முதல்வர் கேள்வி எழுப்பினார். அங்கு நிலத்தடி நீர் கெட்டுப்போய் பாதித்துள்ளது. இங்கு பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, நிலத்தடி நீரையே சுத்திகரித்து ஆலைகளுக்கு வழங்கினால், அந்நீர் சுத்தமாகும் என விளக்கினோம். ஆரம்பத்தில், 40 கோடி ரூபாயில் அனுமதி வழங்கினார்.
அப்பணிக்கான டெண்டர் நேற்று முன்தினம் திறக்கப்பட்டுள்ளது. 56 கோடி ரூபாயாக உயர்த்தி, நவீனமாக செயல்படுத்தப்படுகிறது. டெண்டர் இறுதியானதும், 10 மாதம் முதல், ஓராண்டுக்குள் பணிகள் முடித்து செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். வீட்டு வசதி வாரியத்துக்கு விவசாயிகள், 40 ஆண்டுக்கு முன் வழங்கிய நிலங்கள் பெரும்பாலான இடங்களில் பயன்படுத்தப்படாமல் இருந்தது.
அந்நிலங்களை, உரியவர்களிடமே வழங்க முதல்வர் உத்தரவிட்டு, 21 ஆயிரம் ஏக்கர் நிலம் உரியவர்களுக்கு ஒப்படைக்கும் பணி துவங்கி உள்ளது. இதற்காக, 16 இடங்களில் பொது புகார் பெட்டி வைத்து, நிலம் வழங்கியவர்களிடம் கோரிக்கை, விபரம் பெறப்பட்டு, விடுதல் இன்றி சட்டப்படி மீண்டும் அவர்களிடமே அந்நிலம் ஒப்படைக்கும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு கூறினார்.