/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நிலத்தை அபகரித்த மகன்: தீக்குளிக்க முயன்ற தாய்
/
நிலத்தை அபகரித்த மகன்: தீக்குளிக்க முயன்ற தாய்
ADDED : அக் 01, 2024 07:38 AM
ஈரோடு: தன் நிலத்தை மகன் அபகரித்ததுடன், தனக்கு உணவு கூட வழங்கவில்லை எனக்கூறி, ஈரோடு கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில், 68 வயதான தாயார் தீக்குளிக்க முயன்றார்.
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த குறிச்சி பிரிவு பகுதியை சேர்ந்தவர் செல்லம்மாள்,68. இவருக்கு சக்திவேல் என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசிக்கின்றனர். இவரது மகன் சக்திவேல், திருப்பூரில் தங்கி பணி செய்து வருகிறார்.குறிச்சி பிரிவில், செல்லம்மாள் வாங்கிய, 5 சென்ட் நிலம் இருந்தது. கடந்த ஓராண்டுக்கு முன், 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்நிலத்தை மகன் சக்திவேல், தான கிரயம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுபற்றி, ஏற்கனவே ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் செல்லம்மாள் மனு வழங்கி, 'தன்னை மகன் ஏமாற்றி தான கிரயம் செய்துவிட்டார். அந்த தான கிரயத்தை ரத்து செய்ய வேண்டும்' என புகார் செய்துள்ளார். ஆனால், இம்மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இந்நிலையில் நேற்று காலை, 10:20 மணிக்கு ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இதுபற்றி மீண்டும் புகார் மனு வழங்க வந்திருந்தார். திடீரென நுழைவு வாயில் பகுதியில் மண்ணெண்ணையை தன் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், செல்லம்மாளை காப்பாற்றி எச்சரித்தனர். பின், கலெக்டரிடம் மனு வழங்க அனுமதித்தனர். இச்சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.