/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அந்தியூர், புளியம்பட்டியில் கோவில்களில் திருட்டு
/
அந்தியூர், புளியம்பட்டியில் கோவில்களில் திருட்டு
ADDED : நவ 16, 2025 01:37 AM
அந்தியூர்;வெள்ளித்திருப்பூர் அடுத்த ஒலகடத்தில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ராஜ ராஜேஸ்வரி சொக்கநாச்சி அம்மன் கோவில் உள்ளது. பூசாரியாக செந்தில் உள்ளார். நேற்று காலை வழக்கம்போல் பூசாரி கோவிலுக்கு வந்தார். கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வெள்ளித்திருப்பூர் போலீசார் ஆய்வில், அம்மன் கழுத்தில் இருந்த இரண்டு பவுன் மதிப்பிலான மூன்று தாலிக்கொடி திருட்டு போனது தெரிய வந்தது. உண்டியலும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உண்டியலில், 13 ஆயிரம் ரூபாய் அளவுக்கு பணம் இருந்திருக்கலாம் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளித்திருப்பூர் போலீசார் கைவரிசை காட்டிய ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
தொடரும் திருட்டு
புன்செய் புளியம்பட்டி அருகே வெங்கநாயக்கன்பாளையம் குடியிருப்பு பகுதியில், ஹரி நாராயணன் கோவில் உள்ளது. பூசாரி நேற்று காலை வழக்கம்போல் வந்தார். அப்போது முன்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, கருவறையில் சுவாமி கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த அரை பவுன் தங்கத்தாலி மாயமாகி இருந்தது. உண்டியலில் இருந்த, 5,000 ரூபாய் அளவுக்கான பணமும் திருட்டு போனது தெரிய வந்தது. புகாரின்படி புன்செய் புளியம்பட்டி போலீசார், களவாணிகளை தேடி வருகின்றனர். புன்செய்புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் சமீபமாக சிறு கோவில்களை குறிவைத்து திருட்டு நடப்பது அதிகரித்துள்ளதாக, மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

