/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஐ.டி., ஊழியர் வீட்டில் 38 பவுன் நகை திருட்டு
/
ஐ.டி., ஊழியர் வீட்டில் 38 பவுன் நகை திருட்டு
ADDED : மே 21, 2024 11:38 AM
ஈரோடு: ஈரோட்டில் ஐ.டி., ஊழியர் வீட்டில், 38 பவுன் நகை திருட்டு போனது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு, குமலன்குட்டை, செல்வம் நகர் இரண்டாவது வீதியை சேர்ந்தவர் மகேஸ்வரன், 38; கோவையில் ஐ.டி., கம்பெனியில் பணியாற்றி வருகிறார். சொந்த வீட்டில் கீழ் தளத்தை வாடகைக்கு விட்டுள்ளார். முதல் தளத்தில் மகேஸ்வரன், இரண்டாவது தளத்தில் உறவினர்கள் வசிக்கின்றனர். குடும்பத்துடன் திருமணத்துக்கு சென்ற மகேஸ்வரன், நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார்.
திருமணத்துக்கு அணிந்து சென்றது, வீட்டில் இருந்தது என, 38.5 பவுன் தங்க நகைகளை ஒரு வெள்ளை நிற கட்டை பையில் போட்டு பீரோவில் வைத்தார். வீட்டின் வெளியே உள்ள இரும்பு கதவை (மாடி கதவு) பூட்டி விட்டு, முன்புற மர கதவை திறந்து வைத்து அனைவரும் துாங்க சென்றனர். நேற்று அதிகாலை எழுந்து பார்த்தபோது, பீரோ திறந்து கிடந்தது. உள்ளே வைத்த, 38.5 பவுன் நகை, 5,௦௦௦ ரூபாய் மதிப்பிலான மொபைல் போன் கொள்ளை போனது தெரிந்தது. வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்தார்.
இதே போல் மகேஸ்வரன் வீட்டின் அருகில் வசிப்பவர் சண்முகம். எஸ்.எஸ். மார்ட் உரிமையாளர். இவரது வீட்டில் மொபைல்போன், வெள்ளி கொலுசு, செயின், வெள்ளி காப்பு உள்ளிட்ட பொருட்களும் திருட்டு போனது. 'சிசிடிவி' காட்சி பதிவுகளை போலீசார் ஆராய்ந்ததில், மூன்று பேர் வெள்ளை நிற கட்டை பையுடன் செல்லும் காட்சி கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் கைவரிசை காட்டிய ஆசாமிகளை தேடி வருகின்றனர். மாநகரில் ஒரே நாளில் இரு வீடுகளில் திருட்டு போன சம்பவம், மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

