ADDED : அக் 24, 2025 01:01 AM
திருப்பூர், ''திருப்பூர் மாவட்டத்தில், யூரியா தட்டுப்பாட்டை சமாளிக்கும் நோக்கில், 'இப்கோ' நிறுவனம் வாயிலாக, இம்மாதம், 650 மெட்ரிக் டன் யூரியா பெறப்பட்டு, இருப்பு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது'' என, மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் சுந்தரவடிவேலு தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:
திருப்பூர் மாவட்டத்தில், ராபி பருவத்தில் பெரும்பாலான மானாவாரி பயிர்களும், இரவை பயிரான மக்காச்சோள பயிரும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ராபி பருவத்திற்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் சில்லரை விற்பனை நிலையங்கள் மற்றும் அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும், உரம் இருப்பு வைக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது, திருப்பூர் மாவட்டத்தில், யூரியா, 2,349 மெட்ரிக் டன்; டி.ஏ.பி., 2,256 மெட்ரிக் டன்; பொட்டாஷ், 892 மெட்ரிக் டன்; சூப்பர் பாஸ்பேட், 714 மெட்ரிக் டன் மற்றும் காம்ப்ளக்ஸ், 4,916 மெட்ரிக் டன் இருப்பு உள்ளது. தற்போது நிலவும் யூரியா உர தட்டுப்பாட்டை நீக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, 'இப்கோ' நிறுவனம் வாயிலாக, இம்மாதம், 650 மெட்ரிக் டன் யூரியா பெறப்பட்டு, இருப்பு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உரம் விற்பனை குறித்து, அனைத்து உர விற்பனையாளர்களுக்கும், வட்டார அளவில் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது 'பாய்ன்ட் ஆப் சேல்' இயந்திரம் வாயிலாக மட்டுமே உரம் விற்பனை செய்யப்பட வேண்டும்; விற்பனை விலைக்கு மிகாமல் உரங்களை வினியோகிக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

