ADDED : அக் 25, 2026 07:07 AM

அந்தியூர்:அந்தியூர் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கன மழையால், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், ஈரோடு மாவட்டம், அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில், தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
கடந்த இரு நாட்களாக அந்தியூர், தவிட்டுப்பாளையம், சின்னத்தம்பிபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும், வெள்ளித்திருப்பூர், சென்னம்பட்டி சுற்று வட்டார பகுதியிலும் கன மழை வெளுத்து வாங்கியது.
மேலும், அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணை நீர்பிடிப்பு பகுதியில், மிதமானது முதல் கனமழை பெய்தது. அணை நீர்பிடிப்பு பகுதிகளான கும்பரவாணி பள்ளம், கல்லுப்பள்ளம், வரட்டுப்பள்ளம் ஆகிய இடங்களிலும் பெய்த மழையால், அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதுதவிர, பர்கூர் மேற்கு மலையிலுள்ள தாளகரை வனப்பகுதியில் பெய்த மழை நீரும் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு, 36 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையின் மொத்த கொள்ளளவான, 33.3 அடியில், தற்போது நீர்மட்டம், 18 அடியாக உள்ளது. கடந்த மூன்று நாட்களில் பெய்த மழையால், வரட்டுப்பள்ளம் அணை இரண்டு அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அந்தியூர் பகுதியில் பெய்த கன
மழையால், தாழ்வான பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அந்தியூர் ஈஸ்வரன் கோவில் வளாகத்தில் மழைநீர் தேங்கி நின்றது. நேற்று மதியத்துக்குப்
பின்னரே கோவில் வளாகத்தில் மழைநீர் வடிந்தது.
