/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வேன் மீது கார் மோதல்: மூவர் பலி
/
வேன் மீது கார் மோதல்: மூவர் பலி
ADDED : ஏப் 25, 2024 04:07 AM

திருக்கோவிலுார்: ஈரோடு மாவட்டம், மலையம்பாளையத்தை சேர்ந்தவர்கள் வெள்ளையன் மகன் வடிவேல்,44; ஆறுமுகம் மகள் நந்தினி,28; கோபிநாத் மனைவி அம்பிகாவதி,40; மகள் இந்துஜா,15; மூர்த்தி மனைவி அனிதா,35; இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றுவிட்டு, நேற்று அதிகாலை 'டட்சன்' காரில் ஈரோட்டிற்கு புறப்பட்டனர்.
காரை, ஈரோடு மாவட்டம் குமாரசாமிபுரத்தை சேர்ந்த சின்னையன் மகன் மோகன்ராஜ்,49; ஓட்டினர். நேற்று காலை 5:50 மணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அருகே, திருவண்ணாமலை - தியாகதுருகம் சாலையில், பொன்னியந்தல் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, எதிரே கொடைக்கானலில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற சுற்றுலா வேன் மீது கார் மோதியது. அதில், காரின் முன்பகுதி முற்றிலுமாக நொறுங்கியது.
கார் இடிபாட்டில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை, அவ்வழியே சென்றவர்கள் மீட்டனர். அதில், வடிவேல், மோகன்ராஜ், நந்தினி ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
படுகாயமடைந்த அம்பிகாவதி, இந்துஜா, அனிதா ஆகியோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வேன் டிரைவர் திருவண்ணாமலையை சேர்ந்த ரஷித் மகன் ஜலாலுதீன், 30; மீது திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

