சைக்கிள், புல்லட் மீது ஆட்டோ மோதல் டிரைவர் பலி: 2 பேர் படுகாயம்
சைக்கிள், புல்லட் மீது ஆட்டோ மோதல் டிரைவர் பலி: 2 பேர் படுகாயம்
ADDED : நவ 21, 2026 06:32 PM

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே மேம்பாலத்தில் சைக்கிள், புல்லட் மீது ஆட்டோ மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் இறந்தார்.
உளுந்துார்பேட்டை அடுத்த கிள்ளனுார் பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல், 40; ஆட்டோ டிரைவர். இவர், நைனாகுப்பம் பகுதியில் இருந்து உளுந்துார்பேட்டை நோக்கி இன்று (நவ.,21) காலை ஆட்டோவை ஓட்டிச் சென்றார். 11.30 மணியளவில் உளுந்துார்பேட்டை ரயில்வே மேம்பாலத்தில் வந்தபோது, கிழக்குமருதுாரைச் சேர்ந்த சண்முகம், 65; என்பவர் ஓட்டி வந்தை சைக்கிள் மீது மோதியது.
இதில் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ உளுந்துார்பேட்டை பழைய போஸ்ட் ஆபீஸ் பகுதியைச் சேர்ந்த ஆஷிக் அலி. 25; என்பவர் ஓட்டி வந்த ராயல் என் பீல்டு புல்லட்டில் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் பழனிவேல் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
படுகாயம் அடைந்த சண்முகம், ஆஷிக்அலி ஆகிய இருவரும் உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் 12:00 மணி வரை போக்குவரத்து பாதித்தது. உளுந்துார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பழனிவேல் உடலை மீட்டு விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி வாகன போக்குவரத்தை சரி செய்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
