ADDED : செப் 01, 2025 06:24 AM
திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் நடந்த இலவச கண் பரிசோதனை முகாமில் 850 பேர் பங்கேற்றனர்.
மேல்மருவத்துார் பங்காரு அடிகளார் 85வது பிறந்த நாளை முன்னிட்டு, திருக்கோவிலுார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் மற்றும் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் திருக்கோவிலுார் சக்தி மன்ற வளாகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற நிர்வாகி பரத்குமார் தலைமை தாங்கினார். முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலை முன்னாள் பொது மேலாளர் திருநாவுக்கரசு முகாமை துவக்கி வைத்தார்.
அரவிந்த் கண் மருத்துவமனை சிறப்பு மருத்துவ குழுவினர் முகாமில் பங்கேற்ற 850 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர். இதில் 182 பேர் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை விஜயலட்சுமி, ருக்மணி, ஸ்வேதா, செல்வம், சுதாகர் மற்றும் மன்ற பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.