/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
எளிதில் மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரிப்பு: சுற்றுச்சூழல் மாசடைவதை தவிர்க்க நடவடிக்கை தேவை
/
எளிதில் மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரிப்பு: சுற்றுச்சூழல் மாசடைவதை தவிர்க்க நடவடிக்கை தேவை
எளிதில் மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரிப்பு: சுற்றுச்சூழல் மாசடைவதை தவிர்க்க நடவடிக்கை தேவை
எளிதில் மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரிப்பு: சுற்றுச்சூழல் மாசடைவதை தவிர்க்க நடவடிக்கை தேவை
ADDED : நவ 25, 2025 05:03 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட, ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால் சுற்றுசூழல் மாசடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 50 மைக்ரானுக்கு கீழ் உள்ள ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த அரசு தடை விதித்தது.
அதாவது பால், தயிர், எண்ணெய், மருத்துவ பொருட்களுக்கான உறைகள் தவிர்த்து, 50 மைக்ரானுக்கு குறைவாக உள்ள எளிதில் மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள்கள், தட்டு, தேநீர் மற்றும் தண்ணீர் கப், கேரி பேக், கொடிகள் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கவும், விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை செய்யப் பட்டது.
தடை உத்தரவு அமலானதும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் காய்கறி கடை, ஓட்டல்கள், பேக்கரிகள் உட்பட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகம் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டு, சுற்று சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் உள்ள கேரி பேக் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், அபராதமும் விதிக்கப்பட்டது.
இதனால் கடைகளில் துணி மற்றும் பேப்பர் பைகளில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.
மேலும், சோள மாவு, கரும்பு அல்லது உருளைக்கிழங்கு மாவுச்சத்து உள்ளிட்ட இயற்கை பொருட்களில் இருந்து உருவாக்கப்பட்ட 'பாலிலாக்டிக் அமிலம்' என்ற எளிதில் மக்கும் வகையிலான கேரி பேக் கடைகளில் பயன்படுத்தப் பட்டது.
காலப்போக்கில் அரசு அலுவலர்களின் கண்காணிப்பு இல்லாததால், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளது.
வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக காய்கறி, உணவகங்கள், பேக்கரி, இறைச்சி உள்ளிட்ட கடைகளுக்கு செல்லும் பொதுமக்கள் பாத்திரம், பை ஆகியவற்றை எடுத்து செல்வதில்லை.
நாகரீகம் என்ற பெயரில் பிளாஸ்டிக் பொருட்களை விரும்புவதால், எளிதில் மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு மீண்டும் அதிகரித்து வருகிறது.
கடையில் இருந்து வீட்டிற்கு சென்றதும் பொருட்களை எடுத்துக்கொண்டு, பிளாஸ்டிக் பைகளை பொதுமக்கள் ஆங்காங்கே வீசுகின்றனர். எளிதில் மக்காத பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுசூழல் கடுமையாக மாசடைகிற து.
கள்ளக்குறிச்சி நகர பகுதியில் தினமும் சேமிக்கப்படும் குப்பைகளில் அதிகளவு பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளன.
இந்த குப்பைகள் மலைபோல் குவிந்திருப்பதாலும், எளிதில் மக்காததாலும் இரவு நேரங்களில் தீயிட்டு எரிக்கப்படுகிறது.
இதனால் கள்ளக்குறிச்சி கோமுகி ஆற்றுப்பாலம் வழியாக செல்லும் பயணிகளுக்கும், அங்கு வசிப்பவர்களுக்கும் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. தற்போது மழை பெய்து வரும் நிலையில், கழிவுநீர் கால்வாய், ஏரிக்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால், ஆறு உள்ளிட்ட இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியிருப்பதை காணமுடிகிறது.
எனவே, நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் மீண்டும் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பயன்படுத்தப்படும் எளிதில் மக்காத பிளாஸ்டிக் பொருட்களை பறி முதல் செய்ய வேண்டும்.
கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பதை தவிர்த்து, மாற்று ஏற்பாடாக உள்ள பொருட்களை பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும்.
கடைக்கு செல்லும் பொதுமக்களும் வீடுகளில் இருந்து பை எடுத்து சென்றால் மட்டுமே சுற்றுச்சூழல் மாசுபடுவதை கட்டுப்படுத்த முடியும்.

