UPDATED : நவ 10, 2026 03:48 PM
ADDED : நவ 10, 2026 03:44 PM

கள்ளக்குறிச்சி: கார்த்திகை தீபத்தையொட்டி, அகல் விளக்கு தயாரிக்கும் பணிகள், கள்ளக்குறிச்சி பகுதியில் தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழகத்தில், கார்த்திகை தீப திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினங்களில் வீடுகள், வணிக நிறுவனங்களில் மண்ணால் செய்த அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். இந்தாண்டு வரும் 24ம் தேதி கார்த்திகை தீப திருவிழா நடக்கிறது. இதனையொட்டி, கள்ளக்குறிச்சி அடுத்த மலைக்கோட்டாலம் கிராமத்தில் 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், அகல்விளக்கு தயாரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நாள் ஒன்றுக்கு, ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் 500க்கம் மேற்பட்ட அகல் விளக்குகளை தயாரிக்கின்றனர். இதேபோல் இவர்கள் மண் அடுப்புகள் தயாரிப்பு பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இவைகள், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம், கச்சிராயபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்துவருகின்றனர்.
