/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
படைப்புழு தாக்குதலால் மக்காச்சோளம் மகசூல்... பாதிப்பு: நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
/
படைப்புழு தாக்குதலால் மக்காச்சோளம் மகசூல்... பாதிப்பு: நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
படைப்புழு தாக்குதலால் மக்காச்சோளம் மகசூல்... பாதிப்பு: நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
படைப்புழு தாக்குதலால் மக்காச்சோளம் மகசூல்... பாதிப்பு: நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
ADDED : டிச 12, 2025 06:54 AM

கள்ளக்குறிச்சி: க ள்ளக்குறிச்சி மாவட்டத்தில் படைப்புழு தாக்குதலால் மக்காசோளம் பயிரில் மகசூல் பாதிக்கப்படும் சூழலால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்காசோளம் பயிர்கள் ஆண்டுதோறும் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. நடப்பாண்டில் 2,800 விவசாயிகள் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டுள்ளனர்.
மூன்று மாதங்களில் நன்கு வளர்ந்ததும் அறுவடை செய்து மார்க்கெட் கமிட்டிகள், தனியார் மாவு மில்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். ஒரு ஏக்கருக்கு 2 ஆயிரம் கிலோ வரை மகசூல் கிடைக்கும்.
இந்நிலையில், பருவ நிலை மாற்றம் காரணமாக மக்காசோளம் பயிரில் உருவாகும் படைப்புழு தாக்குதலால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்தப்புழு செடியின் குருத்து பகுதியை உண்பதால், பயிர் முற்றிலுமாக சேதமடைகிறது. மக்காசோளம் பயிரிட்டுள்ள விவசாய நிலங்களுக்கும் அடுத்தடுத்து ஊடுருவி பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. தற்போது மக்காசோளம் பயிரிட்டுள்ள வயல்களில் படைப்புழு தாக்குதலால் பாதிப்புக்குள்ளாகி வருகிறது.
மாவட்டத்தில் படைப்புழு பாதிப்பு உள்ள மக்காசோளம் வயல்களை வேளாண்மை துறை அலுவலர்கள் ஆய்வு செய்து, அதனை கட்டுபடுத்த மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் தொடர்பாக விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர். அதில் படைப்புழு தாக்குதலை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில் புழுவின் தாக்குதல் தீவிரமாகி பயிர் சேதம், மகசூல் இழப்பு ஏற்படும்.
தாய் பூச்சி முட்டை குவியல்களை இலையின் அடிப்பகுதியில் இடுகின்றன. அதிலிருந்து வெளிவரும் புழுக்கள் இலையின் அடிப்பகுதியை தின்று சேதமாக்கும்.
வளர்ந்த புழுக்கள் தண்டு, அடிப்பகுதி, நுனிப்பகுதியை தின்று சேதம் விளைவிக்கும். படைப்புழு தாக்குதல் அதிகரிக்கும் போது அசாடிராக்டின், இமாமெக்டின் மருந்து ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் 80 கிராம் மருந்தினை கலந்து தெளிக்கலாம். அதேபோல் பயிர்கள் நன்கு வளர்ந்த நிலையில்(நாட்களுக்கேற்ப) உரிய ஆலோசனை பெற்று ஸ்பெனிடோரம், நவ்லுரான், புளு பெண்டமைடு ஆகிய மருந்துகளை தெளித்து கட்டுப்படுத்தலாம்.
இயற்கை ஒட்டுண்ணிகள் மற்றும் இறை விழுங்கிகள் உண்பதற்காக தட்டைப்பயிறு, சூரியகாந்தி, எள் போன்றவற்றை வரப்பு பயிராக பயிரிட வேண்டும். அதன் மூலம் புழுக்களை கவர்ந்து அழிக்கலாம்.
பயிரிடுவதற்கு முன் கோடை உழவு செய்து மண் ணில் உள்ள கூட்டு புழுக்களை அழிக்கலாம். கடைசி உழவின் போது ஒரு ஏக்கருக்கு 100 கிலோ கிராம் வேப்பம் பிண்ணாக்கு இடவேண்டும்.
ஒரு கிலோ கிராம் விதைக்கு நுண்ணுயிர் பூச்சிக்கொல்லியான பிவேரியா பேசியானா அல்லது தயோ மீத்தாஸம் மருந்தினை 10 கிராம், இவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
மக்காச்சோளத்திற்கு பிறகு, மீண்டும் அதனையே பயிரிடுவதை தவிர்த்து பயிறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்து போன்ற வேறு வகை பயிர்கள் என சுழற்சி முறையை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடித்தால் மக்காசோள படைப் புழுவினை கட்டுப்படுத்தலாம் என்று விவசாயிகளுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே ஒவ்வொரு ஆண்டும் படைப்புழு தாக்குதலால் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். பயிர்கள் வளரும் பருவத்தில் அதிகமாக இருப்பதால், அதன் வளர்ச்சி முற்றிலும் பாதித்து 'மகசூல்' பாதிக்கிறது. இதனை கட்டுப்படுத்த வேளாண் துறை அலுவலர்கள் பரிந்துரை செய்யும் மருந்துகளை வாங்கி பயன்படுத்தினாலும், அடுத்த சில நாட்களில் மீண்டும் படைப்புழு தாக்குதல் ஏற்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.
படைப்புழு தாக்குதலால் பாதிப்புக்குள்ளாகும் பயிர்களை ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

