/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சின்னசேலம் - கூகையூர் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரிக்கை! மருத்துவமனை செல்வோர் காத்திருப்பதை தடுக்க நடவடிக்கை தேவை
/
சின்னசேலம் - கூகையூர் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரிக்கை! மருத்துவமனை செல்வோர் காத்திருப்பதை தடுக்க நடவடிக்கை தேவை
சின்னசேலம் - கூகையூர் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரிக்கை! மருத்துவமனை செல்வோர் காத்திருப்பதை தடுக்க நடவடிக்கை தேவை
சின்னசேலம் - கூகையூர் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரிக்கை! மருத்துவமனை செல்வோர் காத்திருப்பதை தடுக்க நடவடிக்கை தேவை
ADDED : அக் 07, 2025 12:42 AM

சின்னசேலம்: சின்னசேலம் - கூகையூர் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்னசேலம் வளர்ந்து வரும் நகரமாக மாறி வருகிறது. சின்னசேலம் சுற்றுவட்டார பகுதியில் அரிசி ஆலைகள், பல்வேறு கல்வி நிறுவனங்கள் இயங்குகிறது. இங்கு, கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு மீட்டர் கேஜ் ரயில் பாதையுடன் ரயில் நிலையம் அமைக்கப்பட்டது. பின்னர் அகல ரயில்பாதையாக தரம் உயர்த்தப்பட்டது.
சின்னசேலம் ரயில் நிலையத்திலிருந்து சேலம், விருத்தாசலம் இடையே 4 தினசரி ரயில்களும், 2 சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது. யஷ்வந்பூர், புதுச்சேரிக்கு வாரந்திர ரயில்கள் இயக்கப்படுகிறன. இங்கு சரக்கு இறங்கு தளம் உள்ளதால், சென்னை, விசாகப்பட்டினம், துாத்துக்குடி, போன்ற இடங்களிலிருந்து சரக்கு ரயில்கள் மூலம் கொண்டுவரப்படும் ரேஷன் அரிசி, உரங்கள், லாரிகள் மூலம் பல மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
தற்போது சின்னசேலம் - கள்ளக்குறிச்சி இடையிலான ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில், பொற்படாக்குறிச்சி வரை ரயில் பாதை பணி முடிந்து, கடந்த மாதம் சோதனை ஓட்டம் நடந்தது.
சின்னசேலம் அடுத்த குரால், தோட்டப்பாடி, காலசமுத்திரம், தாகம்தீர்த்தாபுரம், பெத்தாசமுத்திரம், வீரபயங்கரம், கூகையூர், பாக்கம்பாடி, நைனார்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சின்னசேலம் - கூகையூர் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
கூகையூர் வழியாக பெரம்பலுார், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பஸ் இயக்கப்படுகிறது. நைனார்பாளையம், திட்டக்குடி, வேப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், சின்னசேலம் பகுதியில் இயங்கும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் பஸ்களும், சின்னசேலம் - கூகையூர் சாலையை பயன்படுத்துகின்றனர்.
சின்னசேலம் கூகையூர் சாலையில் ரயில்வே கேட் உள்ளது. தினமும் பகல் நேரத்தில் 10 ரயில்களும், இரவு நேரத்தில் 4 ரயில்களும் சின்னசேலம் கடந்து செல்கிறது. இதுதவிர ஏராளமான சரக்கு ரயில்களும் சின்னசேலம் ரயில் நிலையம் வந்து செல்கின்றன.
ஒவ்வொரு முறை ரயில் கடக்கும்போது, கூகையூர் ரயில்வே கேட் 20 நிமிடங்களுக்கு மேல் மூடப்படுகிறது.
இதனால் அவசர வேலைகளுக்கு செல்வோர் சரியான நேரத்திற்கு செல்ல முடிவதில்லை. சின்னசேலத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அரசு மருத்தவமனை உள்ளது. இம்மருத்துவமனையில் சின்னசேலம் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினமும் சிகிச்சை பெறுகின்றனர். குறிப்பாக முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் தொடர் சிகிச்சை மற்றும் பரிசோதனைக்காக வந்து செல்கின்றனர்.
கூகையூர் ரயில்வே கேட்டால் மருத்துவமனைக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் அழைத்து செல்லப்படும் போது, ரயில்வே கேட் மூடப்டுவதால் நீண்ட நேரம் காத்திருக்கும் அவல நிலை உள்ளது. இதனால் விபத்தில் சிக்கிய நபர் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியாமல் உயிரிழப்பு ஏற்படும் சம்பவங்களும் நடந்துள்ளது.
கூகையூர் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை தெற்கு ரயில்வே நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சின்னசேலம் - கூகையூர் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க மாவட்ட நிர்வாகம் தெற்கு ரயில்வே துறைக்கு அழுத்தம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.