ADDED : ஆக 29, 2026 10:32 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சியில் திடக்கழிவுகளை நான்கு வகையாக தரம் பிரித்து வழங்குதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கள்ளக்குறிச்சி நகராட்சி கமிஷ்னர் ரவிச்சந்திரன் உத்தரவுப்படி, நகராட்சி பகுதியில் திடக்கழிவுகளை நான்கு வகையாக தரம் பிரித்து வழங்குதல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி துப்புரவு அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026ன் படி, குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உருவாகும் குப்பைகளை ஈரக் கழிவு , உலர் கழிவு, சுகாதாரக் கழிவு, சிறப்பு கவனக் கழிவு என நான்கு வகையாக தரம் பிரித்து வழங்குவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகளை, 4 வகை குப்பை தொட்டிகளில் சேகரித்து நகராட்சி துாய்மை பணியாளர்களிடம் மட்டும் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மீறி பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவோருக்கு குடியிருப்பு வாசிகளுக்கு ரூ.500 அபராதமும், வணிக நிறுவனங்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து கொசுவினால் பரவும் டெங்கு காய்ச்சலை தடுப்பது குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், துாய்மை இந்தியா இயக்க பரப்புரையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இளநிலை உதவியாளர் நாராயணமூர்த்தி நன்றி கூறினார்.
