தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கல்வராயன்மலையில் கோடை விழா துவக்கம் : 6 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பதால் மகிழ்ச்சி

கல்வராயன்மலையில் கோடை விழா துவக்கம் : 6 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பதால் மகிழ்ச்சி

கல்வராயன்மலையில் கோடை விழா துவக்கம் : 6 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பதால் மகிழ்ச்சி


UPDATED : ஜூலை 30, 2026 06:25 PM

ADDED : ஜூலை 30, 2026 06:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 30, 2026 06:25 PM ADDED : ஜூலை 30, 2026 06:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் முக்கிய நிகழ்வான கோடை விழா, கல்வராயன்மலை கோடை விழா கடந்த 6 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடப்பதால் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரியாலுாரில் இன்று(31 ம் தேதி) துவங்கி இரு நாட்கள் நடக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்ட மேற்கு எல்லையில் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் கல்வராயன்மலை அமைந்துள்ளது. மலைப் பகுதியில் மேகம், பெரியார், கவியம் உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகள், படகுசவாரி, பூங்கா ஆகியவை இருப்பதால் சுற்றுலா தலமாகவும் உள்ளது. மலைக்கு மெருகூட்டும் வகையில் மலை அடிவாரத்தில் கோமுகி அணை அமைந்துள்ளது. தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் ஜூன்-ஜூலை மாதத்தில் 2 நாட்கள் வெகுவிமர்சையாக கோடை விழா நடத்துவது வழக்கம்.

விழாவில் மலைவாழ் மக்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், பல்வேறு கலை நிகழ்ச்சிகள், அரசு துறைகளின் பல்துறை கண்காட்சி அரங்குகள் அமைத்து திட்டங்கள் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். விழாவிற்கு பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வருகை புரிவர். விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது, முக்கிய நிகழ்வாக கோடை விழா இருந்தது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020-2021 ஆகிய இரண்டு ஆண்டுகள் கோடை விழா நடத்தப்படவில்லை. அதன்பின் 4 ஆண்டுகள் கோடை விழாவை நடத்த முன்வரவில்லை. கோடை விழா கைவிடப்பட்டதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், புதியதாக பொறுப்பேற்ற த.வெ.க., ஆட்சியிலாவது கோடை விழா நடத்த முன்வர வேண்டும் மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து கரியாலுாில் இன்று(31 ம் தேதி) துவங்கி இரு நாட்கள் கோடை விழா நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கல்வராயன்மலை கோடை விழாவை கண்டுகளிக்க வரும் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து கலெக்டர் பத்மஜா அறிவிப்பு செய்துள்ளார். அதில் கோடை விழாவில் பல்வேறு அரசு துறைகளின் கண்காட்சி அரங்குகள், பள்ளி மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், மலைவாழ் மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது. விழாவில் அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். கோடை விழாவிற்கு பொதுமக்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் சங்கராபுரம், சின்னசேலம், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ் வசதி இயக்கப்படுகிறது.

மேலும், விழாவிற்கு கள்ளக்குறிச்சியிலிருந்து கச்சிராயபாளையம் வழியாக கரியாலுாருக்கு வாகனங்களில் செல்லும் மக்கள் நிகழ்ச்சி முடிந்து அவ்வழியிலேயே இறங்க வேண்டும். இவர்களுக்கு மாவடிப்பட்டு டேனிஷ் மிஷன் பள்ளி பின்புறம் 4 சக்கர வாகன நிறுத்தமும், கரியாலுார் அங்கன்வாடி மையம் அருகே 2 சக்கர வாகன நிறுத்தமும் அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சேராப்பட்டு, கருமந்துறை வழியாக வாகனங்களில் கரியாலுார் செல்லும் மக்கள் அதே வழியிலேயே இறங்க வேண்டும். இவர்களுக்கு சேராப்பட்டு சந்திப்பு அருகே வாகன நிறுத்தமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரு நாட்கள் நடைபெறும் கோடை விழா மாலை 6:00 மணிக்கு முடிவதால், மாலை 4:00 மணிக்குமேல் இவ்வழிகளில் கரியாலுார் செல்ல அனுமதி கிடையாது. வழக்கமான அரசு பஸ்கள் எவ்வித மாற்றமும் இல்லாமல் இயக்கப்படும். மலைவாழ் மக்கள் தங்களின் கிராமங்களுக்கு செல்ல எவ்வித தடையும் இல்லை. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு காரணங்களுக்காக இந்த மாற்றம் செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us