ADDED : அக் 12, 2025 04:34 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் கரும்பு சாகுபடி மற்றும் நிலுவை தொகை முத்தரப்புக் கூட்டம் நடந்தது.
மாவட்ட கூட்டுறவு, தனியார் சர்க்கரை ஆலை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாய மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கரும்பு சாகுபடி மற்றும் நிலுவைத் தொகை குறித்தும், தரணி சர்க்கரை ஆலைக்கு உட்பட்ட கரும்பு சாகுபடி பரப்பினை பிற கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து அரவைக்கு பிரித்து வழங்குவது குறித்தும் ஆலோசனை நடந்தது.
தரணி தனியார் சர்க்கரை ஆலையிலிருந்து விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகையினை விரைவில் வழங்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் சத்தியமூர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜோதிபாசு, விவசாயிகள் கலந்து கொண்டனர்.