UPDATED : அக் 28, 2026 07:21 PM
ADDED : அக் 28, 2026 07:19 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 28 தேர்வு மையங்களில் வரும் 1ம் தேதி நடக்கும் குரூப் 2, 2ஏ தேர்வில் 8,232 பேர் தேர்வு எழுதுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கலெக்டர் பத்மஜா செய்திக்குறிப்பு:
தமி ழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2, 2ஏ தேர்வு வரும் நவம்பர் 1ம் தேதி நடக்கிறது. மாவட்டத்தில், 28 மையங்களில் 8,232 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
கள்ளக்குறிச்சி தாலுகாவில் ஏ.கே.டி., பொறியியல் கல்லுாரி, ஏ.கே.டி., பாலிடெக்னிக் கல்லுாரி, ஏ.கே.டி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஏ.கே.டி., சி.பி.எஸ்.இ., பள்ளி, கல்வியியல் கல்லுாரி, இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரி, கல்வியியல் கல்லுாரி, கள்ளக்குறிச்சி பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சவுடாம்பிகா வித்யாலயா பள்ளி, ஆர்.ஆர்., கேம்பிரிட்ஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மையங்களில் 6,918 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
அதேபோல் திருக்கோவிலுார் தாலுகாவில் கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீஞானானந்தா மெட்ரிக் பள்ளி, டெனிஷ் மிஷன் பெண்கள் போர்டிங் பள்ளி, ஜி.அரியூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, திருப்பாலபந்தல் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் 1.314 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வு எழுத வருபவர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வு கூடத்திற்கு வர வேண்டும். காலை 9:00 மணிக்கு மேல் வருபவர்கள் தேர்வுக் கூடத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தேர்வுக்கூடத்திற்குள் மொபைல் மற்றும் எந்த வகையான மின்னணு சாதனங்களையும் எடுத்து செல்ல அனுமதி கிடையாது. கருப்பு பந்து முனை பேனாவினால் மட்டுமே தேர்வு எழுத வேண்டும். ஹால்டிக்கெட் தவறாமல் கொண்டு வர வேண்டும்.
தேர்வர்கள் எவ்வித சிரமமுமின்றி தேர்வு எழுதிடும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து தயார் நிலையில் உள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
