UPDATED : நவ 04, 2026 12:20 PM
ADDED : நவ 04, 2026 12:18 PM

கள்ளக்குறிச்சி: சடையம்பட்டு கிராமத்தில் சேதமடைந்த தார் சாலையை சீரமைக்க வலியுறுத்தி கரும்பு ஏற்றிச் சென்ற டிராக்டரை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு நிலவியது.
கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி கிராமங்களில் அறுவடை செய்யப்படும் கரும்பு பயிர் டிரெய்லர் மற்றும் கனரக லாரிகள் மூலம் ரோடுமாமாந்துார், சோமண்டார்குடி, சடையம்பட்டு வழியாக கச்சிராயபாளையத்திற்கு செல்கிறது. அதிக பாரம் கொண்ட வாகனங்கள் செல்வதால் சடையம்பட்டு கிராம சாலை சேதமடைந்தது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று மாலை 4:30 மணியளவில் அவ்வழியாக சென்ற கரும்பு லோடு டிராக்டரை சிறை பிடித்தனர்.
தகவலறிந்த கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் தலைமையிலான போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது சேதமடைந்த சாலையை மாவட்ட நிர்வாகம் அல்லது ஆலை நிர்வாகம் சீரமைத்து தர வேண்டும் என வலியுறுத்தினர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து 5:00 மணியளவில் டிராக்டரை விடுவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
