/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் 4500 மூட்டை மக்காச்சோளம் ஏலத்திற்கு வருகை
/
அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் 4500 மூட்டை மக்காச்சோளம் ஏலத்திற்கு வருகை
அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் 4500 மூட்டை மக்காச்சோளம் ஏலத்திற்கு வருகை
அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் 4500 மூட்டை மக்காச்சோளம் ஏலத்திற்கு வருகை
ADDED : அக் 28, 2025 05:50 AM
திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டி ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் அதிக விளை பொருட்கள் ஏலத்திற்கு வருகிறது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் நம்பிக்கையுடன் அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டிக்கு தங்கள் விளை பொருட்களை ஏலத்திற்கு கொண்டு வருகின்றனர். இப்பகுதியின் தட்பவெப்ப நிலை, தண்ணீர் தேவை ஆகியவற்றுக்கு உகந்ததான மக்காச்சோள பயிர் அதிக விளைச்சலை கொடுப்பதும், கடந்த ஆண்டு கூடுதல் விலை உள்ளிட்டவையால் லாபகரமான பயிராக மக்காசோளம் மாறியதால் இந்த ஆண்டு பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தற்பொழுது தீவிரமடைந்திருக்கும் வடகிழக்கு பருவமழையையும் பொருட்படுத்தாமல், விவசாயிகள் முதிர்ந்த மக்காச்சோளத்தை அறுவடை செய்து மிகுந்த சிரமங்களுக்கிடையே பதப்படுத்தி மார்க்கெட் கமிட்டிக்கு ஏலத்திற்கு கொண்டு வருகின்றனர். நேற்று மட்டும் 4,500 மூட்டை மக்காச்சோளம் ஏலத்திற்கு வந்தது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மந்தமான வானிலை காரணமாக அதனை முழுமையாக காய வைத்து பதப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. ஈரப்பதற்கேற்ப விலை நிர்ணயம் செய்யப்படுவதால், விலை பெருமளவில் சரிவை சந்தித்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி ஒரு மூட்டை மக்காச்சோளம் அதிக பட்ச விலையாக ஒரு மூட்டை 1,996 ரூபாய்க்கும், குறைந்த விலையாக 1,000 ரூபாய்க்கும், சராசரி விலையாக 1,910 ரூபாய்க்கு விற்பனையானது. இன்னும் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டிருக்கும் மக்காச்சோளம் தொடர் மழையின் காரணமாக வயலிலேயே வீணாகிக் கொண்டிருக்கிறது.
மழை சற்று குறைந்து, வானம் தெளிவடைந்தால் மட்டுமே அறுவடை செய்ய முடியும் என்ற சூழலில், அதன் விலையும் சரிவை சந்தித்து இருப்பது விவசாயிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

