/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகள் துார்வார நீர்வளத்துறை காத்திருப்பு
/
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகள் துார்வார நீர்வளத்துறை காத்திருப்பு
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகள் துார்வார நீர்வளத்துறை காத்திருப்பு
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகள் துார்வார நீர்வளத்துறை காத்திருப்பு
ADDED : ஆக 18, 2024 11:54 PM
சென்னை : சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளை துார் வார, நிதித்துறையின் அனுமதி கிடைக்காமல் நீர்வளத் துறையினர் காத்திருக்கின்றனர்.
புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
கிடப்பில் திட்டம்
இவற்றின் மொத்த கொள்ளளவு, 11.25 டி.எம்.சி.,யாக உள்ளது. இந்த ஏரிகள், கட்டப்பட்டது முதல் துார் வாரப்படவில்லை. இதனால், மண், மணல் மட்டுமின்றி, திடக்கழிவுகள் அதிக அளவில் தேங்கியுள்ளதால், 1.90 டி.எம்.சி., அளவிற்கு கொள்ளளவு பாதிக்கப்பட்டு உள்ளது.
நான்கு ஏரிகளின் கொள்ளளவை மீட்பதற்கு துார் வாரும் பணிகளை மேற்கொள்ள, அ.தி.மு.க., ஆட்சியில் திட்டமிடப்பட்டது.
இதன் வாயிலாக, அரசிற்கு முதற்கட்டமாக 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்டவும், இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
சோழவரம், பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளை துார்வார, 20.44 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கின.
புழல் ஏரியை துார் வாரும் செலவிற்கு, 9.90 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஏரியில் நீர் இருந்ததால், பணிகள் துவக்கப்படவில்லை. கடந்த 2021ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க., அரசு பொறுப்பேற்றது.
அதன் பிறகு, ஏரியை துார்வார நீர்வளத்துறை நியமித்த ஒப்பந்த நிறுவனத்திற்கு அனுமதி நிறுத்தப்பட்டு, மூன்று ஆண்டுகளாக திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
இதனால், நான்கு ஏரிகளில் முழு கொள்ளளவு நீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து பாலாறு வடிநில கோட்ட உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
அ.தி.மு.க., ஆட்சியில், தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகள் துார் வாரும் வகையில், தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு பணிகள் துவங்கின.
நம்பிக்கை
மூன்று ஆண்டுகளாக பணிகள் நடக்கவில்லை. ஒப்பந்த நிறுவனத்திற்கு இன்னும் ஓராண்டு காலம் அவகாசம் உள்ளது. சோழவரம், பூண்டி ஏரிகள் வறண்டு கிடக்கின்றன.
நிதித்துறை அனுமதி அளித்தால், துார்வாரும் பணிகளை துவக்க முடியும். துார் வாராததால், ஆண்டுதோறும் கிடைக்கும் நீரின் பெரும்பகுதி வீணாகி வருகிறது.
அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை காலம் துவங்க உள்ளதால், அதற்குள் அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம்.
சோழவரம் ஏரியில் செம்மண், பூண்டி ஏரியில் வண்டல் மண் மட்டுமின்றி, ஆற்று மணல் வளம் அதிக அளவில் உள்ளது. இவற்றை துார்வாரி விற்பனை செய்வதால், அரசிற்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.
இதையும் நிதித்துறை கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.