/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அடாவடி கவுன்சிலர்கள் 5 பேர் பதவி பறிப்பு? முதன்மை செயலர் நோட்டீஸ் வழங்கியதால் ‛கிலி'
/
அடாவடி கவுன்சிலர்கள் 5 பேர் பதவி பறிப்பு? முதன்மை செயலர் நோட்டீஸ் வழங்கியதால் ‛கிலி'
அடாவடி கவுன்சிலர்கள் 5 பேர் பதவி பறிப்பு? முதன்மை செயலர் நோட்டீஸ் வழங்கியதால் ‛கிலி'
அடாவடி கவுன்சிலர்கள் 5 பேர் பதவி பறிப்பு? முதன்மை செயலர் நோட்டீஸ் வழங்கியதால் ‛கிலி'
ADDED : ஜூலை 31, 2024 04:30 AM
சென்னை, : சென்னை மாநகராட்சியில் திட்ட பணிகளுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திய, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வை சேர்ந்த ஐந்து கவுன்சிலர்கள் பதவியை பறிக்கும் விதமாக, நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலர் நோட்டீஸ் வழங்கி உள்ளார்.
சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள் உள்ளன. இதில், 152 பேர் தி.மு.க., கவுன்சிலர்கள். மாநகராட்சி பகுதிகளில் சாலை, வடிகால், கால்வாய், மின்கேபிள் பதிப்பு போன்ற பணிகளும், விரிவாக்க மண்டலங்களில் குடிநீர், கழிவுநீர் திட்ட பணிகளும் நடைபெறுகின்றன.
இதில், அதிக கமிஷன் கேட்டு பணிகளை நிறுத்தியது, ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் மீது தாக்குதல், அதிகாரிகளை தரக்குறைவாக பேசியது, தாக்கியது போன்ற புகார்களில், சில கவுன்சிலர்கள் சிக்கி உள்ளனர்.
குறிப்பாக குடிநீர், கழிவுநீர் திட்ட பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியது, திறப்பு விழா நடத்திய திட்டங்களில் இணைப்பு பெறும் மக்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தது, தர மறுக்கும் நபர்களுக்கு இணைப்பு வழங்கக்கூடாது என அதிகாரிகளை வற்புறுத்துவது தொடர்பாக, முதல்வர் வரை புகார் சென்றது.
இதையடுத்து, சிறப்பு நுண்ணறிவு போலீசார் வாயிலாக, ஒவ்வொரு கவுன்சிலர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.
இதில், மாதவரம், அம்பத்துார், பெருங்குடி, சோழிங்கநல்லுார் மண்டலங்களில் உள்ள சில கவுன்சிலர்கள் மீது, மக்கள் அதிக அதிருப்தியில் உள்ளதாகவும், அவர்களால் திட்ட பணிகளுக்கு ஏற்பட்ட இழப்பு, இடையூறு குறித்து, அமைச்சர் நேருவுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சட்டம் 1998 பிரிவு 52 (1)ன் படி கீழ் நோட்டீசில் அளிக்க உத்தரவிடப்பட்டது. குற்றச்சாட்டுக்கு ஆளான கவுன்சிலர்களை ஏன் தகுதிநீக்கம் செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு, நான்கு தி.மு.க., கவுன்சிலர்கள் மற்றும் அ.தி.மு.க.,வை சேர்ந்த ஒரு கவுன்சிலருக்கு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலர் காத்திகேயன், நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
இதனால், ஐந்து கவுன்சிலர்களின் பதவி பறிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் சில கவுன்சிலர்கள் மீது அடுத்தடுத்து நோட்டீஸ் வழங்க உள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.