/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாகறலீஸ்வரர் கோவிலில் நாளை பாலாலயம்
/
மாகறலீஸ்வரர் கோவிலில் நாளை பாலாலயம்
ADDED : ஆக 28, 2024 09:03 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், மாகறல் கிராமத்தில், திருமாகறலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, ராஜகோபுரம், பரிவார சன்னிதிகளான விநாயகர், ஆறுமுக சுவாமி, கஜருத சுப்பிரமணியசுவாமி, பைரவர் உள்ளிட்ட சன்னிதிகளுக்கு திருப்பணி துவங்க கடந்த ஆண்டு ஜூலை 9ம் தேதி பாலாலயம் நடந்தது.
இதில், மூலவர் விமானம், தாயார் விமானம், சன்னிதி உட்புறம் தவிர, பரிவார மூர்த்தி சன்னிதி, ராஜகோபுரம், சுற்றுச்சுவர், முன் மண்டபம் உள்ளிட்ட திருப்பணி செய்து முடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மூலவர் சன்னிதி திருப்பணிக்கான பாலாலயம் நாளை, காலை 9:00 மணிக்கு நடைபெறுகிறது. இப்பணி ஒரு மாதத்தில் முடிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்துவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என, கோவில் செயல் அலுவலர் கதிரவன் தெரிவித்தார்.