/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தேசிய நீர்வழித்தட அறிவிப்பை கண்டு கொள்ள வேண்டாம்; அப்ரூவலை அப்புறம் பார்த்துக்கலாம்!
/
தேசிய நீர்வழித்தட அறிவிப்பை கண்டு கொள்ள வேண்டாம்; அப்ரூவலை அப்புறம் பார்த்துக்கலாம்!
தேசிய நீர்வழித்தட அறிவிப்பை கண்டு கொள்ள வேண்டாம்; அப்ரூவலை அப்புறம் பார்த்துக்கலாம்!
தேசிய நீர்வழித்தட அறிவிப்பை கண்டு கொள்ள வேண்டாம்; அப்ரூவலை அப்புறம் பார்த்துக்கலாம்!
UPDATED : ஆக 12, 2025 07:24 AM
ADDED : ஆக 11, 2025 11:02 PM

நான்காவது தேசிய நீர்வழித்தடமாக பகிங்ஹாம் கால்வாயை மத்திய அரசு அறிவித்துள்ளதால், திருப்போரூர் அருகே கோவளம் வடிநிலப்பகுதியில் 350 கோடி ரூபாயில், புதிய நீர்தேக்கம் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
'சட்டசபை தேர்தல் நெருங்குவதால், ஜனவரியில் நீர்தேக்கத்தை திறக்கும் வகையில் வேலையை துவக்குங்கள்; மத்திய அரசு அனுமதியை அப்புறம் வாங்கிக்கொள்ளலாம்' என, நீர் வளத்துறை அதிகாரிகளுக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை மக்களின் குடிநீர் தேவையை புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை, வீராணம் ஆகிய ஏரிகள் வாயிலாக பூர்த்தியாகிறது. இந்த ஏரிகள், 13.2 டி.எம்.சி., கொள்ளவு உடையவை.
விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளால், சென்னையின் குடிநீர் தேவை அதிகரித்து வருகிறது. இதனால், கூடுதல் நீராதாரங்களை உருவாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
இதற்காக, திருப்போரூர் அருகே பகிங்ஹாம் கால்வாயை ஒட்டி, கோவளம் வடிநிலப்பகுதியில், 350 கோடி ரூபாயில் புதிய நீர்தேக்கம் அமைக்கப்படும் என, இந்தாண்டு மார்ச்சில், தமிழக பட்ஜெட்டில் அரசு அறிவித்தது.
கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலைகளுக்கு மத்தியில், இந்த புதிய நீர்தேக்கம் அமைய உள்ளது.
இதற்காக, தமிழக உப்பு நிறுவனம் உட்பட அரசிற்கு சொந்தமான 4,735 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.
இந்த நிலங்கள் கேளம்பாக்கம், தையூர், திருப்போரூர், காலவாக்கம், நெம்மேலி ஆகிய கிராமங்களை ஒட்டி அமைந்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காலங்களில் மானாமதி, சிறுதாவூர், தையூர், மணவேடு, காலவாக்கம் உள்ளிட்ட 69 ஏரிகளில் இருந்து வெளியேறும் வெள்ளநீர் இங்கு தேங்குகிறது.
ஆண்டுதோறும், 2.97 டி.எம்.சி., நீர் அங்கு தேங்கி வீணாகி பகிங்ஹாம் கால்வாய் வாயிலாக கடலில் கலப்பதாக ஆய்வு வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில், 1.60 டி.எம்.சி., நீரை சேமிக்கும் வகையில், புதிய நீர்தேக்கம் அமைய உள்ளது.
இந்த நீரை சுத்திகரித்து சோழிங்கநல்லுார், நாவலுார், மேடவாக்கம், பள்ளிக்கரை, சிறுசேரி, கேளம்பாக்கம் பகுதிகளில் வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
இதுமட்டுமின்றி, மாமல்லபுரம் வரையுள்ள பகுதிகளுக்கும் குடிநீர் எடுத்து செல்லும் வகையில், திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.
புதிய நீர்தேக்கத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி, நீர்வளத்துறை வாயிலாக விண்ணப்பம் செய்யப்பட்டு இருந்தது. இதற்கு, மாவட்ட அளவில் ஒப்புதல் கிடைத்துள்ளது.
மாநில அளவில் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல ஒப்புதல் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கரைகளை பலப்படுத்தி நீரை தேக்கி, அடுத்தாண்டு ஜனவரியில் புதிய நீர்தேக்கத்தை திறக்க, நீர்வளத்துறை அவசரம் காட்டி வருகிறது. ஆனால், நீர்தேக்க திட்டத்திற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.
இதுகுறித்து, நீரியல் வல்லுனர் ஒருவர் கூறியதாவது:
நாடு முழுதும் உள்ள முக்கிய நீர்வழித்தடங்களில் படகு போக்குவரத்தை துவங்க, மத்திய ஜல்சக்தி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக, நான்காவது தேசிய நீர்வழித்தடமாக பகிங்ஹாம் கால்வாய் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், நீர்தேக்கம் அமைக்க வேண்டும் என்றால், மத்திய ஜல்சக்தி அமைச்சக ஒப்புதல் பெற வேண்டும்.
இதுகுறித்து, அரசிடம் எடுத்துரைக்கப்பட்டு உள்ளது. திட்டத்தை அறிவித்துவிட்டு இப்போது ஒப்புதல் கேட்டால் கிடைக்காது. எனவே, 'சப்தம் இல்லாமல் பணியை செய்யுங்கள்; அனுமதியை அப்புறம் வாங்கிக் கொள்ளலாம்' என, அரசின் முக்கிய அதிகாரி ஒருவர் ஆலோசனை கூறியுள்ளார்.
அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், ஜனவரி மாதத்திலேயே புதிய நீர்தேக்கத்தை திறக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
சப்தம் இல்லாமல் பணியை இப்போது துவக்கினாலும், கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அனுமதி பெறும்போது, இந்த தகவல் அம்பலமாகி, அரசுக்கு சிக்கலாகும்.
மேலும், புதிய நீர்தேக்கம் அமையவுள்ள இடத்தில் மழைநீருடன், கடல்நீர் தேங்கும். இந்த நீர்தேக்கத்தில், நல்ல நீரை எப்படி பிரித்து தேக்க போகின்றனர் என்று தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
***
- நமது நிருபர் -