/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்களில் மயான கொள்ளை
/
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்களில் மயான கொள்ளை
ADDED : பிப் 25, 2025 07:37 PM
காஞ்சிபுரம்:பெரிய காஞ்சிபுரம் ஜவஹர்லால் நேரு மார்க்கெட் பின்புறம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், 142வது ஆண்டு மயான கொள்ளை உற்சவம் நாளை நடைபெறுகிறது. விழாவையொட்டி, கடந்த 23ம் தேதி காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் பந்தக்கால் விழா நடந்தது.
மஹாசிவராத்திரியான இன்று இரவு 7:00 மணிக்கு, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து சிவலிங்க பூஜையுடன் அம்மன் புறப்பாடு நடக்கிறது.
நாளை மதியம் 1:00 மணிக்கு சிம்ம வாகனத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் எழுந்தருளி, கிழக்கு சர்வதீர்த்தம் அடுத்த மயானத்தில், மாலை 6:00 மணிக்கு மயான கொள்ளை உற்சவம் நடைபெறுகிறது.
வரும் 28ம் தேதி இரவு 7:00 மணிக்கு, அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவமும், கும்பம் படையலிடப்படுகிறது. மார்ச் 1ம் தேதி காலை 7:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழாவும், வீதியுலாவும் நடைபெறுகிறது.
சின்ன காஞ்சிபுரம்
சின்ன காஞ்சிபுரம் திருக்கச்சிநம்பி தெருவில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் மயான கொள்ளை உற்சவம் நடந்து வருகிறது. அதன்படி, நடப்பாண்டு 120வது ஆண்டு மயான கொள்ளை உற்சவம் நாளை நடக்கிறது.
இதையொட்டி, நேற்று காப்பு கட்டுதலும், பூங்கரக உற்சவமும் நடந்தது. இன்று இரவு மஹா சிவராத்திரி பூஜை நடக்கிறது. நாளை காலை 9:00 மணிக்கு சின்ன வேப்பங்குளக்கரையில் இருந்து ஜலம் திரட்டுதலும், மாலை 4:00 மணிக்கு அங்காளம்மன், கோவிலில் இருந்து புறப்பட்டு சின்ன காஞ்சிபுரம் வேகவதி நதி மயானத்தில் மயான சூறை நடக்கிறது.
சிறுகாவேரிபாக்கம்
காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிபாக்கம் மங்கல நாயகி உடனுறை மாசிலாமணீஸ்வரர் மற்றும் ஜெகதீஸ்வரி மாரியம்மன், மஹா காளியம்மன் கோவிலில், மயான கொள்ளை பெருவிழா நாளை நடக்கிறது.
இதையொட்டி, இன்று மாலை முதல் நான்கு ஜாம பூஜையும், இரவு 7:00 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது. நாளை காலை 9:00 - 10:30 மணி வரை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 5:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும், இரவு 8:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும் நடக்கிறது.