/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பொலிவு பெறும் கரிக்கிலி பறவைகள் சரணாலயம்
/
பொலிவு பெறும் கரிக்கிலி பறவைகள் சரணாலயம்
ADDED : மார் 03, 2025 12:16 AM

மதுராந்தகம், வேடந்தாங்கல் சரணாலயம் அருகே, கரிக்கிலி பறவைகள் சரணாலயம் உள்ளது.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் இருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள கரிக்கிலி பெரிய ஏரியிலும், பறவைகள் கூடுகள் கட்டி, இனப்பெருக்கம் செய்து வந்தன.
அதனால், வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு இணையாக கரிக்கிலி பகுதியும், கடந்த 1989ம் ஆண்டு, பறவைகள் சரணாலயமாக உருவாக்கப்பட்டது. ஆண்டுதோறும் வேடந்தாங்கலில் பறவைகளின் சீசன் துவங்கும் போது, கரிக்கிலி சரணாலயமும் சுற்றுலா பயணியரின் பார்வைக்கு திறந்து விடப்படப்பட்டது.
வேடந்தாங்கல் சரணாலய ஏரியை விட, இரு மடங்கு பெரிய ஏரியாக கரிக்கிலி சரணாலயம் உள்ளதால், வேடந்தாங்கல் சரணாலயம் போன்ற தோற்றத்திற்கு, கரிக்கிலி சரணாலயம் மாற்றப்பட்டது.
இந்நிலையில், கரிக்கிலி சரணாலயத்தை புனரமைக்க, தமிழக அரசு கடந்த 2014ல், 50 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கியது. இதையடுத்து சரணாலயத்தில் சுற்றுலா பயணியருக்கான நடைபாதையை விரிவுபடுத்துதல், ஏரியை துார்வாரி கரையை பலப்படுத்துதல், பார்வையாளர்கள் மாடம், குடிநீர் குழாய்கள், கழிப்பறை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இருப்பினும், சரணாலயத்தை சரியான முறையில் பராமரிக்காததால் இருக்கைகள், நடைபாதை, பறவைகள் மற்றும் விலங்குகள் வடிவில் அமைக்கப்பட்ட குழாய்கள் சேதமடைந்தன.
போதிய அளவில் பறவைகள் வரத்து இல்லாததாலும், சுற்றுலாப் பயணியர் வருகை தராததாலும் பொலிவிழந்து, பயன்பாடு இல்லாமல் காணப்பட்டது.
தற்போது, மீண்டும் கரிக்கிலி சரணாலயத்திற்கு பறவைகள் வரத்தை அதிகரிக்கும் வகையில், சரணாலயத்தில் ஏரிக்கரை பகுதிகளில் இருந்த முட்புதர்கள் அகற்றப்பட்டுள்ளன.
மேலும், ஏரிக்கரை சீரமைப்பு, கரிக்கிலி சரணாலயம் பெயர் பலகை எழுதுதல் போன்ற முதற்கட்ட பணிகளை, வனத்துறையினர் துவக்கி உள்ளனர். இதனால், சரணாலயம் புதுப்பொலிவு பெற்று வருகிறது.