ADDED : மார் 04, 2025 01:49 AM
எடையார்பாக்கம்,
மதுரமங்கலம் அடுத்த, எடையார்பாக்கம் ஊராட்சியில் இருந்து, கோட்டூர் ஊராட்சிக்கு செல்லும், 2 கி.மீ., துாரம் ஏரிக்கரை சாலை உள்ளது.
இந்த சாலை வழியாக, கோட்டூர் ஊராட்சி மக்கள், எடையார்பாக்கம், மேலேரி, பரந்துார் வழியாக, காஞ்சிபுரம் மற்றும் மதுரமங்கலம் வழியாக, சுங்குவார்சத்திரம் ஆகிய பகுதிக்கு சென்று வருகின்றனர்.
அதேபோல், எடையார்பாக்கம் கிராம பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, கோட்டூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று வருகின்றனர்.
இந்த ஏரிக்கரை சாலை, கடந்த ஆண்டு புதிதாக போடப்பட்டது. இந்த சாலையோரம் போதிய மின் கம்பங்கள் இல்லை. இதனால், மின் விளக்கு வசதி ஏற்படுத்த முடியவில்லை என, உள்ளாட்சி பிரதிநிதிகள் இடையே புலம்பல் ஏற்படுத்தி உள்ளது.
இருப்பினும், எடையார்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, கோட்டூர் கிராமத்திற்கு செல்லும் பிரதான ஏரிக்கரையோரம் சாலையில் இரவு நேரங்களில் செல்லும் போது கிராமத்தினர் அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது.
எனவே, எடையார்பாக்கம் - கோட்டூர் இடையே மின் விளக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க, சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலக நிர்வாகம் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.