/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாம்புதுார் குவாரி போக்குவரத்துக்கு அனுமதி... இல்லை! பாதைக்கு பட்டா வேண்டும் என்கிறார் கலெக்டர்
/
மாம்புதுார் குவாரி போக்குவரத்துக்கு அனுமதி... இல்லை! பாதைக்கு பட்டா வேண்டும் என்கிறார் கலெக்டர்
மாம்புதுார் குவாரி போக்குவரத்துக்கு அனுமதி... இல்லை! பாதைக்கு பட்டா வேண்டும் என்கிறார் கலெக்டர்
மாம்புதுார் குவாரி போக்குவரத்துக்கு அனுமதி... இல்லை! பாதைக்கு பட்டா வேண்டும் என்கிறார் கலெக்டர்
ADDED : ஜூலை 02, 2024 03:18 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், மாம்புதுார் கிராமத்தில், கல்குவாரிக்கு பட்டா பாதை இருந்தால் மட்டுமே, போக்குவரத்துக்கு அனுமதி வழங்க முடியும் என, கலெக்டர் கலைச்செல்வி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். குவாரிக்கு அனுமதி வழங்கக்கூடாது என, கலெக்டர் கலைச்செல்வியிடம் கிராமத்தினர் நேற்றும் மனு அளித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகா பழவேரி, சிறுதாமூர், மாகரல் என, பல்வேறு கிராமங்களில் செயல்படும் கல்குவாரிகளால், ஏராளமான பாதிப்புகள் தொடர்ந்தபடியே உள்ளன. இதனால், புதிய கல்குவாரிக்கு கிராம மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
குவாரி நடத்துவோர் மேற்கொள்ளும் விதிமீறல்களால் விவசாயம் பாதித்து, வாழ்வாதாரத்தை இழப்பதால், சுற்றியுள்ள கிராமத்தினர் பலரும், குவாரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதன்படி, மாம்புதுார் கிராமத்திலும், கல்குவாரிக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
மாம்புதுார் கிராமத்தில், கற்கள் மற்றும் கிராவல் ஆகியவற்றை வெட்டி எடுத்து குவாரி நடத்த, வாசன் என்பவருக்கு, 10 ஆண்டுகளுக்கு, கனிமவளத்துறை இரு ஆண்டுகளுக்கு முன் அனுமதியை வழங்கியுள்ளது.
மாம்புதுார் கிராமத்தில், குவாரி செயல்பட ஆட்சேபனை தெரிவித்து, 2022ம் ஆண்டு முதல், கிராமத்தினர், கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார் என, பல அதிகாரிகளிடம் தொடர்ந்து மனு அளித்து, குவாரி இயங்க எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
குவாரி செயல்பட உள்ள பகுதியில், விவசாய நிலங்களும், ஏரியும் இருப்பதால் அதிக பாதிப்பு ஏற்படும் என, கிராம மக்கள் போராடி வருகின்றனர்.
இதற்கிடையே, குவாரி செயல்பட தேவையான பாதைக்கு பட்டா நிலம் இல்லாததால், குவாரி இன்று வரை செயல்பட முடியாத நிலை நீடிக்கிறது.
ஆனால், குவாரி தரப்பினர் கிராமத்தில் உள்ள அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து குவாரி போக்குவரத்துக்கு பயன்படுத்துவதாக, சமீபத்தில் பிரச்னை எழுந்துள்ளது.
கனிமவளத்துறை, நீதிமன்றம் என அனைத்து வகையான அமைப்புகளிடமும், குவாரி நடத்துவோர் சென்று முறையிட்டுள்ளனர்.
இருப்பினும், குவாரி அமைவிடம் சுற்றி, போக்குவரத்துக்கு பட்டா நிலம் இல்லாததால், குவாரியை இயக்க முடியாத சூழலே நீடிக்கிறது.
அரசின் விதிமுறைகளை மீறி, ஏரியில் பொக்லைன் வாகனங்களை நிறுத்துவதும், அரசு நிலத்தில் ஜல்லி கொட்டி சாலை அமைக்க முயற்சிகள் நடத்துவதாக, கிராமத்தினர் மற்றும் விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
வருவாய் துறையினரிடம் இதுகுறித்து கேட்டதற்கு, ''பட்டா பாதை இருந்தால் மட்டுமே போக்குவரத்துக்கு கலெக்டர் அனுமதி வழங்குவார்கள். இதுபற்றி விளக்கங்களை, கடந்த மாதம் 5ம் தேதி, கலெக்டர் உத்தரவில் தெளிவாக கூறியிருக்கிறார்.
கலெக்டர் கலைச்செல்வி, கடந்த மாதம், குவாரி உரிமம் பெற்றவருக்கு வழங்கிய உத்தரவில் கூறியிருப்பதாவது:
குவாரி செயல்பட அனுமதி உள்ளது. பட்டா பாதை உள்ளதை, உத்திரமேரூர் தாசில்தார் சான்று அளித்த பிறகே குவாரிக்கான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படும்.
கனிமவளத்துறையின் கமிஷனர் உத்தரவில் கூறியது மற்றும் நிபந்தனைகளை குவாரி செயல்பாட்டில் பின்பற்ற வேண்டும். அருகில் உள்ள பட்டா நிலங்கள், கிராம மக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் குவாரி பணி நடைபெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் சாலை அமைக்க சிலர் முயற்சித்தனர். அவற்றையும் நாங்கள் நிறுத்தி விட்டோம். குவாரியை சுற்றி அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலம் இருப்பதால், குவாரிக்கு செல்ல வழியில்லாமல் உள்ளது,'' என்றார்.-----------------------
நஞ்சை நிலத்தில், ஏரி அடி வாரத்தில், கல்குவாரி அமைக்க முயற்சி செய்கிறார்கள். மேய்க்கால் புறம்போக்கு நிலம் மற்றும் வேளாண் காடு வளர்ப்பு திட்டம் சார்பில் மரம் வளர்ப்பு திட்டமும் அங்கு செயல்படுகிறது. அதன் அருகில், ஏரி கால்வாய் செல்கிறது. கால்வாய் மீது சிறு பாலம் கட்டியதற்கும் ஆட்சேபனை தெரிவிக்கிறோம். சாலை அமைக்க முயற்சி செய்கிறார்கள்.
டி.ஜெயசங்கர்,
மாம்புதுார். உத்திரமேரூர் தாலுகா.----------------------------
கடந்த 2020 முதல் நான்கு ஆண்டுகளாக குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறோம். குவாரி அமையும் இடம், இரு ஏரி நீர்பாசனம் அமையும் இடத்தில் அமைகிறது. குவாரி உரிமம் பெற்றவர், விதிமீறல்களில் ஈடுபடுகிறார். குவாரி அனுமதிக்கு, புஞ்சையை காண்பித்து, நஞ்சை நிலத்தில் குவாரி நடத்த முயற்சிக்கிறார். குவாரி நடத்த அனுமதி வழங்ககூடாது.
இ.பாக்கியராஜ்,
மாம்புதுார், உத்திரமேரூர் தாலுகா.