/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூர்- - கிளாம்பாக்கம் இடையே மாநகர பேருந்து இயக்க கோரிக்கை
/
உத்திரமேரூர்- - கிளாம்பாக்கம் இடையே மாநகர பேருந்து இயக்க கோரிக்கை
உத்திரமேரூர்- - கிளாம்பாக்கம் இடையே மாநகர பேருந்து இயக்க கோரிக்கை
உத்திரமேரூர்- - கிளாம்பாக்கம் இடையே மாநகர பேருந்து இயக்க கோரிக்கை
ADDED : ஆக 29, 2024 09:48 PM
உத்திரமேரூர்,:உத்திரமேரூரில், 40,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். உத்திரமேரூரை சுற்றி 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள ஏராளமான தொழிலாளர்கள் செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் பணியாற்றுகின்றனர்.
மேலும், கல்லுாரி மாணவ -- மாணவியர், சென்னையில் உள்ள கல்வி கூடங்களுக்கு தினசரி சென்று வருகின்றனர். உத்திரமேரூரை சுற்றி, விவசாயம் சார்ந்த பகுதி என்பதால், தோட்டப் பயிர்களை சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்து வாயிலாக எடுத்து செல்கின்றனர்.
உத்திரமேரூரில் இருந்து, பல்வேறு பணிகளுக்காக சென்னை நோக்கி செல்லும் தொழிலாளர்கள், கல்லுாரி மாணவர்கள் செங்கல்பட்டு, தாம்பரம், கிலாம்பாக்கம் என, இரண்டு, மூன்று பேருந்துகளில் பயணிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால், வருமானத்தின் பெரும்பகுதியை, பேருந்து கட்டணமாக செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதுபோன்ற பயணியருக்கு, மாநகர பேருந்துகள் இயக்கினால் பயனுள்ளதாக இருக்கும் எனக்கூறி வருகின்றனர்.
இதுகுறித்து, உத்திரமேரூர் பகுதியினர் கூறியதாவது:
மாநகர பேருந்து சேவை வாயிலாக, தொழிலாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு மாதாந்திர சலுகை கட்டண பஸ் பாஸ் பெரிதும் கை கொடுக்கிறது. ஆனால், உத்திரமேரூருக்கு மாநகர பேருந்து வசதி இல்லாததால், இச்சலுகையை பெற முடியாத நிலை உள்ளது.
மேலும், உத்திரமேரூர் பகுதியில் ரயில் போக்குவரத்து வசதி இல்லாததால், பயணியர் முழுக்க, முழுக்க பேருந்து சேவையை மட்டுமே நம்பி உள்ளனர்.
மாநகர போக்குவரத்தில், துவக்கப் பகுதியில் இருந்து, 53 கி.மீ., தூரம் வரை பேருந்து இயக்க அனுமதி உண்டு. உத்திரமேரூர்- - கிளாம்பாக்கம் இடையிலான தூரம் 52 கி.மீ., தூரம் கொண்டதாக உள்ளது.
எனவே, உத்திரமேரூரில் இருந்து, கிளாம்பாக்கத்திற்கு மாநகர பேருந்து இயக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.