/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கிண்டி தொழிற்பேட்டையில் 120 கடைகளுக்கு 'சீல்' ; சேவை நிறுவனங்கள் மீது 'சிட்கோ' நடவடிக்கை
/
கிண்டி தொழிற்பேட்டையில் 120 கடைகளுக்கு 'சீல்' ; சேவை நிறுவனங்கள் மீது 'சிட்கோ' நடவடிக்கை
கிண்டி தொழிற்பேட்டையில் 120 கடைகளுக்கு 'சீல்' ; சேவை நிறுவனங்கள் மீது 'சிட்கோ' நடவடிக்கை
கிண்டி தொழிற்பேட்டையில் 120 கடைகளுக்கு 'சீல்' ; சேவை நிறுவனங்கள் மீது 'சிட்கோ' நடவடிக்கை
ADDED : அக் 01, 2024 06:30 AM
சென்னை: சென்னை கிண்டி தொழிற்பேட்டையில், உற்பத்தி சார்ந்த தொழிற்சாலை பயன்பாடு தவிர்த்து, கூரியர், உணவகம் போன்ற சேவை தொழில்களில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களுக்கு, 'சீல்' வைக்கப்பட்டு வருகிறது.
இந்த விவகாரத்தில் உரிய முறையில் பேச்சு நடத்தி, எந்த தொழிலுக்கு அனுமதி, அனுமதியில்லாதது எது என்பதை வரைமுறைபடுத்துமாறு, தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிண்டி தொழிற்பேட்டை, 1958ல் துவங்கப்பட்டது. இதுவே, இந்தியாவில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்காக துவங்கப்பட்ட முதல் தொழிற்பேட்டை.
இங்கு செயல்படும் தொழில் நிறுவனங்கள், மோட்டார் வாகன உதிரிபாகங்கள், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் என, பல பொருட்களை உற்பத்தி செய்கின்றன.
கடந்த, 2009ல் கிண்டி தொழிற்பேட்டையில், தகவல் தொழில்நுட்ப நிறுவனம் துவக்க, தொழிற்பேட்டையை நிர்வகிக்கும், 'சிட்கோ' எனும், தமிழக சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் அனுமதி அளித்தது.
சிறு தொழில்கள்
இதனால், பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. தொடர்ந்து, 2012ல் குடியிருப்புகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது.
இதற்காக, 'ஹிந்துஸ்தான் டெலிபிரின்டர்' நிறுவனம் செயல்பட்ட இடம், தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
கிண்டி, அம்பத்துார் தொழிற்பேட்டைகளில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் துவக்கப்படுவதால், அவற்றில் சமூக பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கை உருவாக்க வேண்டும் என, 2012ல், அரசாணை வெளியிடப்பட்டது.
தற்போது, கிண்டி தொழிற்பேட்டையில், 60 தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் செயல்படுகின்றன. இவற்றால் ஏராளமான சிறு தொழில்கள் மூடப்பட்டன.
எனவே, மாறி வரும் தொழில் நடவடிக்கையால், ஊழியர்கள் கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால், குறு, சிறு தொழில்களில் ஈடுபட்டுள்ள பல நிறுவனங்கள், உற்பத்தி சார்ந்த தொழிலில் ஈடுபட்ட இடத்தை கூரியர், உணவகம் போன்ற சேவை சார்ந்த தொழில்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளன.
தற்போது, தொழிற்பேட்டையில் தொழில் சார்ந்த நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் எனக்கூறி, சேவை சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு, 'சீல்' வைக்கும் பணியில், சிட்கோ ஈடுபட்டுள்ளது.
இதுவரை, 120 நிறுவனங்களுக்கு, 'சீல்' வைப்பது குறித்து நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
அதிருப்தி
இதனால் அதிருப்திஅடைந்த உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், சிட்கோவின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடையை மூடுவதைவிட உரிய வழிகாட்டுதல் வழங்க வேண்டும் என, அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் வி.கே.கிரிஷ் பாண்டியன் கூறியதாவது:
சிறு தொழில் நிறுவனங்களுக்காக துவக்கப்பட்ட கிண்டி தொழிற்பேட்டை, தற்போது தகவல் தொழில்நுட்ப பூங்கா, குடியிருப்பு திட்டம் என, மாறி வரும் நிலையில், சேவை நிறுவனங்களை மூட சொல்வது என்ன நியாயம்?
இந்த விவகாரத்தில் முதலில் அரசு, உற்பத்தியாளர்கள் சங்கத்தினரை அழைத்து பேச்சு நடத்தி, விதிகளை வரைமுறைப்படுத்த வேண்டும்.
அதில், எந்த தொழில்களுக்கு அனுமதி என்றும், அனுமதிக்கப்படாத தொழில்கள் எவை என்றும் தெரிவிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து, சிட்கோ அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கிண்டி உட்பட எந்த தொழிற்பேட்டையாக இருந்தாலும், தொழிற்சாலைகள் செயல்பட மட்டுமே அனுமதி உண்டு.
அங்கு ஹோட்டல், கூரியர் உள்ளிட்ட வணிகம் சார்ந்த நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது. எனவே, கிண்டி தொழிற்பேட்டையில் வணிகம் சார்ந்து செயல்படும் நிறுவனங்களுக்கு 'நோட்டீஸ்' அளித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.