/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இரட்டை பதிவு உள்ள 1.26 லட்சம் வாக்காளர்களுக்கு... நோட்டீஸ்!:தாலுகா அலுவலகங்களுக்கு விளக்கமளிக்க அறிவுரை
/
இரட்டை பதிவு உள்ள 1.26 லட்சம் வாக்காளர்களுக்கு... நோட்டீஸ்!:தாலுகா அலுவலகங்களுக்கு விளக்கமளிக்க அறிவுரை
இரட்டை பதிவு உள்ள 1.26 லட்சம் வாக்காளர்களுக்கு... நோட்டீஸ்!:தாலுகா அலுவலகங்களுக்கு விளக்கமளிக்க அறிவுரை
இரட்டை பதிவு உள்ள 1.26 லட்சம் வாக்காளர்களுக்கு... நோட்டீஸ்!:தாலுகா அலுவலகங்களுக்கு விளக்கமளிக்க அறிவுரை
ADDED : நவ 12, 2024 10:43 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில், இரட்டை பதிவுகள் இருப்பதாக கூறி, 1.26 லட்சம் வாக்காளர்களுக்கு, தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி வருகிறது. நோட்டீஸ் பெறும் வாக்காளர்கள், தாலுகா அலுவலகங்களுக்கு, தபால் வாயிலாகவோ அல்லது நேரிலோ சென்று விளக்கமளிக்க வேண்டும் என, தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்த, பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மேற்கொள்வது போன்றவற்றுக்காக, ஆண்டுதோறும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில், வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிடுவது வழக்கம்.
அதைத் தொடர்ந்து, நவம்பர் மாதம் முழுதும் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் போன்றவைக்கு, சிறப்பு முகாம்கள் நடத்தி வாக்காளர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்து, ஜனவரி முதல் வாரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவர்.
அதன்படி, கடந்த அக்.,29ல், நடப்பாண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷனர் வெளியிட்டார். காஞ்சிபுரம் மாவட்டத்தில், கலெக்டர் கலைச்செல்வி, வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம், உத்திரமேரூர் என, நான்கு சட்டசபை தொகுதிகளிலும் சேர்த்து, 13 லட்சத்து, 55,188 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 6 லட்சத்து, 58,818 பேர் ஆண்களும், 6 லட்சத்து, 96,153 பெண்களும், 217 பேர் மூன்றாம் பாலினத்தவரும் ஆவர்.
பட்டியலில் உள்ள வாக்காளர்களில், இரட்டை பதிவு அதிகளவில் இருப்பதாக அரசியல் கட்சியினர் தொடர்ந்து புகார் தெரிவிக்கின்றனர். இதனால், நவீன யுக்திகளை கையாண்டு இரட்டை பதிவுகளை நீக்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அதாவது, வாக்காளரின் பெயர், தந்தை பெயர், வயது, பாலினம் போன்றவை விபரங்களில், ஏதாவது இரண்டு விபரங்கள் ஒன்றாக இருந்தாலே அவற்றை இரட்டை பதிவாக இருக்கக்கூடும் என, தேர்தல் கமிஷனின் கணினி சாப்ட்வேர் அடையாளப்படுத்துகிறது.
அவ்வாறு, தேர்தல் கமிஷனின் சாப்ட்வேர் அடையாளம் காட்டக்கூடிய இரு வேறு வாக்காளர்கள் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, அந்த வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஒரே பெயர், ஒரே தந்தை பெயர் உடைய இரு வேறு வாக்காளராக இருந்தாலும், அவர்களுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்புகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1.26 லட்சம் வாக்காளர்களுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி வருகிறது. நான்கு சட்டசபை தொகுதிகளிலும், இதுவரை 40,000 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தபால் மூலம் வாக்காளர்களின் வீடுகளுக்கே நேரடியாக இந்த நோட்டீஸ் செல்கிறது. நோட்டீசில் ஒரே பெயர், ஒரே தந்தை பெயர் உடைய இரு வேறு வாக்காளர்கள் விபரங்கள் புகைப்படத்துடன் தெரிவித்துள்ளனர்.
அதில், வாக்காளரின் தன் பகுதியில் டிக் அடித்து, சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்திற்கு அந்த நோட்டீசை மீண்டும் தபால் மூலம் அனுப்ப வேண்டும். அல்லது, நேரடியாக தாலுகா அலுவலகம் சென்று கடிதம் வாயிலாக இரட்டை பதிவு இல்லை என, சம்பந்தப்பட்ட வாக்காளர் எழுதி தர வேண்டும் என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
மாவட்டத்தில் இரட்டை பதிவு கொண்ட வாக்காளர்கள் இருப்பதாக கருதி, வாக்காளர்கள் விபரங்களை தேர்தல் கமிஷன் எங்களுக்கு அளித்துள்ளது.
அந்த விபரங்கள் பிரின்ட் எடுத்து, வாக்காளர்களுக்கு, தபால் மூலம் அனுப்பி வருகிறோம். இதுவரை, 40,000 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். மீதமுள்ள வாக்காளர்களுக்கு விரைவில் அனுப்புவோம். வாக்காளர்கள் தங்கள் பெயரில் இரட்டை பதிவு இல்லை என, நோட்டீசில், டிக் அடித்து, அந்த நோட்டீசை தபாலில் தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பிடலாம். அவ்வாறு அனுப்பாமல் அலட்சியமாக விட்டால், அடுத்தாண்டு மீண்டும் நோட்டீஸ் வர வாய்ப்புள்ளது.
எனவே, தேர்தல் கமிஷனின் நோட்டீசுக்கு பதில் அளித்து, தபால் வாயிலாக, டிசம்பர் இறுதிக்குள் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.