/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
193 பயனாளிகளுக்கு பட்டா வழங்கல்
/
193 பயனாளிகளுக்கு பட்டா வழங்கல்
ADDED : பிப் 15, 2024 01:53 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், பென்னலுார் ஊராட்சியில், சிறப்பு மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமை தாங்கினார்.
இம்முகாமில், வருவாய், ஊரக வளர்ச்சி, மாற்றுத்திறனாளிகள் நலன், ஆதிதிராவிடர் மற்றும் சிறுபான்மையினர் நலன், வேளாண், தோட்டக்கலை, கூட்டுறவு, சமூக நலன் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து, துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர்.
இதையடுத்து, வருவாய் துறை சார்பில் 193 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, ஊராக வளர்ச்சி மற்றும் கூட்டுறவுத் துறை சார்பில் 29.50 லட்சம் ரூபாய் மதிப்பு மகளிர் சுயஉதவிக் கடன், வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் நாற்றுகள் மற்றும் வேளாண் இடு பொருட்கள் மானியம் உட்பட, 220 பயனாளிகளுக்கு, 2.31 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்.
முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயகுமார், ஸ்ரீபெரும்புதுார் ஆர்.டி,ஓ., சரவணகண்ணன், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியக் குழுத் தலைவர் கருணாநிதி உட்பட பலர் பங்கேற்றனர்.
முகாமை தொடர்ந்து, பென்னலுார் ஊராட்சி நடுநிலைப் பள்ளியை பார்வையிட்டு, பள்ளி சமையல் கூடத்தில் சமைக்கப்படும் மதிய உணவின் தரத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஊராட்சியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையம், நியாய விலை கடை, ஸ்ரீபெரும்பபுதுார் அரசு மருத்துவமனை ஆகியவற்றை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
* பென்னலுார் ஊராட்சியில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பங்கேற்றவர்களிடம் இருந்து, கோரிக்கை மனு பெறப்பட்டது.
அப்போது, பென்னலுார் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், சாலை, குடிநீர் வசதி, தெருமின் விளக்கு, நுாலகம், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கலெக்டர் கலைச்செல்வியிடம் முறையிட்டு கோரிக்கை மனு வழங்கினர்.

