/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தாய், மகள் கொடூர கொலை வழக்கு 3 பேருக்கு தலா 6 ஆயுள் தண்டனை
/
தாய், மகள் கொடூர கொலை வழக்கு 3 பேருக்கு தலா 6 ஆயுள் தண்டனை
தாய், மகள் கொடூர கொலை வழக்கு 3 பேருக்கு தலா 6 ஆயுள் தண்டனை
தாய், மகள் கொடூர கொலை வழக்கு 3 பேருக்கு தலா 6 ஆயுள் தண்டனை
ADDED : நவ 21, 2025 01:42 AM

காஞ்சிபுரம்: குன்றத்துார் அருகே, தாய், மகளை கொடூரமாக கொலை செய்து, பணம், நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேருக்கு, தலா ஆறு ஆயுள் தண்டனை விதித்து, காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் அருகே உள்ள இரண்டாம்கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் வசந்தா, 60. இவர், தன் மகள் தேன்மொழி, 30, பேத்திகள் சுரவிஸ்ரீ,6, மற்றும் ஆறு மாத பெண் குழந்தை குணஸ்ரீ ஆகியோருடன், வசித்து வந்தார். தேன்மொழியின் கணவர் ராமசாமி, வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்.
கொலை திட்டம்
வசந்தா வீட்டில், சத்யா, 25, என்ற இளம்பெண், வேலை பார்த்தார். வீட்டில் உள்ள நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடிக்க தன் தோழி தவ்லத்பேகம், 28, மற்றும் ஆண் நண்பர் ஜெயகுமார், 40, ஆகியோருடன் சேர்ந்து திட்டமிட்டார்.
இதையடுத்து, 2016, ஏப்., 18ம் தேதி, வீட்டிற்குள் நுழைந்த மூவரும், தனியாக இருந்த வசந்தாவின் கழுத்தை கத்தியால் அறுத்து கொடூரமாக கொலை செய்தனர். சற்று நேரம் கழித்து குழந்தைகளுடன் வீட்டிற்குள் வந்த தேன்மொழியையும், அதேபோல, கழுத்தை அறுத்து கொலை செய்தனர். சுரவிஸ்ரீயின் கழுத்தையும் அறுத்தனர்.
பாட்டி, தாய், மகள் இறந்துவிட்டதாக கருதிய சத்யா உட்பட மூவர், பிஞ்சு குழந்தை குணஸ்ரீயை எதுவும் செய்யாமல், வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து தப்பினர்.
ஆனால், மயக்கத்தில் இருந்த சுரவிஸ்ரீ, மறுநாள் காலை கண் விழித்து, ஆறு மாத குழந்தையை துாக்கிக் கொண்டு வீட்டிலிருந்து வெளியே வந்தார். இதை பார்த்து, அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், சுரவிஸ்ரீயிடம் விசாரித்தனர். அப்போது, தாய், பாட்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
உத்தரவு
இவ்வழக்கில், குன்றத்துார் போலீசார் ஆறு பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து, சத்யா, தவ்லத்பேகம், ஜெயகுமார் ஆகிய மூவரையும் பிடித்து கைது செய்தனர்.
இவ்வழக்கு, காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சிறுமி சுரவிஸ்ரீ இவ்வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்தார். தொடர்ந்து விசாரணை நடந்த நிலையில், இவ்வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.
குற்றஞ்சாட்டப்பட்ட சத்யா, 25, தவ்லத்பேகம், 28 ஜெயகுமார், 40, ஆகிய மூன்று பேருக்கும் தலா ஆறு ஆயுள் தண்டனையும், 80,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி அறிவுநிதி உத்தரவிட்டார்.
இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக சசிரேகா வாதாடினார். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு, தமிழக அரசு நிவாரண உதவி வழங்கவும், நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இந்த உத்தரவு ஆறுதலை அளித்துள்ளது.

