/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
4.9 அடி சரிந்த நிலத்தடி நீர்மட்டம்...எச்சரிக்கை!: குடிநீருக்கு சிக்கல் ஏற்படும் அபாயம்
/
4.9 அடி சரிந்த நிலத்தடி நீர்மட்டம்...எச்சரிக்கை!: குடிநீருக்கு சிக்கல் ஏற்படும் அபாயம்
4.9 அடி சரிந்த நிலத்தடி நீர்மட்டம்...எச்சரிக்கை!: குடிநீருக்கு சிக்கல் ஏற்படும் அபாயம்
4.9 அடி சரிந்த நிலத்தடி நீர்மட்டம்...எச்சரிக்கை!: குடிநீருக்கு சிக்கல் ஏற்படும் அபாயம்
ADDED : மே 09, 2024 12:28 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், நீர்வள ஆதாரத்துறை எடுத்த கணக்கெடுப்பின்படி, கடந்த நான்கு மாதங்களில், 4.9 அடி நிலத்தடி நீர்மட்டம் சரிந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் மட்டுமே 1.4 அடி குறைந்துள்ளது. இதன் காரணமாக, கோடை வெயிலால், குடிநீருக்கு சிக்கல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த பிப்ரவரி மாதமே வெயில் அதிகமாக இருந்ததால், நீர்நிலைகளில் கையிருப்பில் உள்ள தண்ணீர், வேகமாக வற்றி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், நீர்ஆதாரத் துறை கட்டுப்பாட்டில், 381 ஏரிகளும், ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் 380 ஏரிகளும், குளம், குட்டைகள் 2,000 எண்ணிக்கையில் உள்ளன.
இதில் உள்ள தண்ணீரை நம்பியே நெல், கரும்பு உள்ளிட்டவை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். ஆனால், வெயில் காரணமாக தண்ணீர் வற்றுவதால், விவசாயிகளும் கவலையடைகின்றனர்.
நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில், 220 ஏரிகளில், 25 சதவீதத்துக்கும் குறைவாகவே தண்ணீர் உள்ளன. உத்திரமேரூர் பெரிய ஏரியில் மட்டுமே, 75 சதவீத தண்ணீர் உள்ளது.
குடிநீர் தட்டுப்பாடு
மற்ற ஏரிகளில், தண்ணீர் குறைவாக இருப்பதால், விவசாயத்திற்கு மட்டுமல்லாமல், கால்நடைகள் குடிப்பதற்கு கூட சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.
நீர்நிலைகள் மட்டுமல்லாமல், நிலத்தடி நீர்மட்டமும் வேகமாக குறைவதால், குடிநீர் பற்றாக்குறை ஏற்படுமோ என்ற அச்சம் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களில் வசிப்போரிடையே ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சியில் பல்வேறு இடங்களுக்கு லாரி வாயிலாக குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
நீர்வள ஆதாரத் துறையினர் மாதந்தோறும் எடுக்கும் கணக்கெடுப்பின்படி, இந்தாண்டு ஜனவரி மாதம் இருந்த நிலத்தடி நீர்மட்டம், ஏப்ரல் மாதத்திற்குள் கடுமையாக சரிந்துள்ளது.
நீர் வளத் துறையினர் மாதந்தோறும் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்துதரை மட்டத்திலிருந்து நிலத்தடி நீர் இருக்கும்அளவை கண்டறிந்து சராசரியை கணக்கெடுக்கின் றனர்.
அவ்வாறு பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட நிலத்தடி நீர்மட்ட அளவின் சராசரியின்படி, கடந்த ஜனவரி மாதம் 3.7 அடியாக இருந்த நிலத்தடி நீர் மட்டம், பிப்ரவரி மாதம், 5.5 அடியாகவும், மார்ச் மாதம் 7.2 அடியாகவும் சரிந்தது. நீர்வள ஆதாரத் துறையினர், ஏப்ரல் மாதம் எடுத்த கணக்கெடுப்பின்படி, 1.4 அடி மேலும் குறைந்து 8.6 அடியாக பதிவாகியுள்ளது.
கடந்த நான்கு மாதங்களில், 4.9 அடி நிலத்தடி நீர் மட்டம் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.
மத்திய அரசின் 'ஜல்ஜீவன்' திட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 185 கோடி ரூபாய் மதிப்பில், அனைத்து கிராமப்புற வீடுகளுக்கு தேவையான குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் போன்ற ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமப்புறங்களில் குடிநீர் தட்டுப்பாடு இப்போதும் உள்ளது.
பாலாற்றில் முறைகேடான ஆழ்துளை கிணறுகள் பல இயங்குகின்றன. அவற்றை அகற்றி, கிணறு அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோடை வெயில் காரணமாக, நிலத்தடி நீர் நுகர்வு அதிகளவில் உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் முறைகேடான குடிநீர் ஆலைகள் பல இயங்குவதாக புகார்கள் உள்ளன.
ராட்சத மோட்டார்கள் கொண்டு, நிலத்தடி நீர் உறிஞ்சுகின்றனர். தண்ணீர் வியாபாரம் அமோகமாக நடப்பதால், முறைகேடான ஆலைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுசூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இணைப்பு துண்டிப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் சட்டவிரோதமாக உள்ள குடிநீர் இணைப்புகள் மற்றும் மின் மோட்டார் இணைப்புகள் பலர் பயன்படுத்துகின்றனர்.
அவற்றை உள்ளாட்சி நிர்வாகம் கண்டறிந்து, அவ்வாறு மின் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டால், உடனடியாக துண்டித்து பறிமுதல் செய்யப்படும்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் அன்றாடம் குடிநீர் வழங்குவதை முறைப்படுத்தும் பொருட்டு, வீடுகள், திருமண மண்டபங்கள் கடைகள் மற்றும் தொழிற்சாலைகளில் சட்ட விரோதமாக பயன்படுத்தப்படும் மின்மோட்டார்கள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படும்.
கோடைக்கால வறட்சியை தவிர்க்கும் வகையில், குடிநீர் வீணாகாமல் சிக்கனமாக பயன்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி கேட்டுக் கொண்டுள்ளார்.