ADDED : நவ 01, 2024 08:16 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், தீபாவளி பண்டிகை நாளில், பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் தீ விபத்துகளை தடுக்க, தீயணைப்பு துறையினர் தயாராக இருந்தனர். தீபாவளி பண்டிகையான நேற்று முன்தினம், மாவட்டம் முழுதும், ஆறு தீ விபத்துகள் நடந்ததாகவும், அதில் யாருக்கும் காயம், உயிரிழப்பு போன்றவை ஏற்படவில்லை என தெரிவித்துள்ளனர்.
வாலாஜாபாத்தில் பழைய பொருட்கள் விற்பனை செய்யும் கடையிலும், கீழ்கதிர்பூர் கிராமத்தில் வைக்கோல் போரும், காஞ்சிபுரம் மாண்டுகணீஸ்வரர் கோவில் தெருவில் பழைய பொருட்கள் கடையிலும், திருக்காலிமேட்டில் கார் ஒன்றிலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அதேபோல, ஒரகடம் அருகே, வஞ்சுவாஞ்சேரி மற்றும் படப்பை ஆகிய இரு பகுதிகளில் உள்ள காயலான் கடைகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்துகளை, அருகில் உள்ள தீயணைப்பு வாகனங்கள் வாயிலாக, தண்ணீர் பீய்ச்சி அடித்து, தீயணைப்பு வீரர்கள் அணைத்து உள்ளனர்.