/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அம்மன் கோவில்களில் ஆடி திருவிழா
/
அம்மன் கோவில்களில் ஆடி திருவிழா
ADDED : ஜூலை 28, 2025 02:06 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் நேற்று ஆடி திருவிழா விமரிசையாக நடந்தது.
காஞ்சிபுரம் சர்வதீர்த்தம் கிழக்கு கரையில் உள்ள குளக்கரை மாரியம்மன் கோவிலில் கடந்த 25ம் தேதி ஆடி திருவிழா திருவிளக்கு பூஜையுடன் துவங்கியது. மூலவர் முப்பெரும் தேவியர் அலங்காரத்திலும், நேற்று முன்தினம் இரவு ஏலக்காய் அலங்காரத்திலும் குளக்கரை அம்மன் அருள்பாலித்தார்.
நேற்று காலை 7.00 மணிக்கு சர்வதீர்த்த குளக்கரையிருந்து ஜலம் திரட்டும் நிகழ்வும், காலை 11.00 மணிக்கு கூழ் வார்த்தலும், மாலை 3.00 மணிக்கு ஊரணி பொங்கல் வைக்கும் நிகழ்வும், மாலை 6.00 மணிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. இரவு 8.00 மணிக்கு அலங்கார புஷ்பவிமானத்தில் அம்மன் எழுந்தருளி வீதியுலா வந்தார்.
தும்பவனம் மாரியம்மன் காஞ்சிபுரம் டெம்பிள் சிட்டி அருகில் உள்ள கணேசா நகர் தும்பவனம் மாரியம்மனுக்கு 40வது ஆண்டு விழா கடந்த 24ம் தேதி துவங்கியது. இரவு 7:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும், தொடர்ந்து ஊஞ்சல் சேவை உத்சவமும் நடந்தது. கடந்த 25ம் தேதி, மாலை 3:00 மணிக்கு மாரியம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடந்தது.
நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 4:30 மணிக்கு சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டியும், மாலை 6:00 மணிக்கு நாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது.
நேற்று காலை 9:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும், மதியம் 12:00 மணிக்கு கூழ்வார்த்தலும், இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் வீதியுலாவும், இரவு 10:00 மணிக்கு கும்பம் படையலிடப்பட்டது.
நெட்டேரி முத்தலாம்மன் காஞ்சிபுரம் அடுத்த நெட்டேரி முத்தாலம்மன் கோவில் ஆடி திருவிழா கடந்த 25ம் தேதி காலை 9:00 மணிக்கு பால்குட ஊர்வலமும், மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடந்தது. நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஊஞ்சல் சேவை உத்சவமும் நடந்தது.
நேற்று காலை 7:00 மணிக்கு முத்தாலம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனையும், சர்வதீர்த்த குளக்கரையில் இருந்து அம்மனுக்கு பூங்கரகம் அலங்கரிக்கப்பட்டு வீதியுலாவும், மதியம் 1:00 மணிக்கு கூழ்வார்த்தலும், மாலை 3:00 மணிக்கு ஊரணி பொங்கல் வைக்கும் நிகழ்வும், இரவு 8:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும் நடந்தது.
படவேட்டம்மன் கோவில்
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் மேட்டுத்தெரு படவேட்டம்மன் கோவிலில் நேற்று காலை 7:00 மணிக்கு விநாயகர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து அம்மன் கரகம் வீதியுலாவும், மதியம் 2:00 மணிக்கு கூழ்வார்த்தலும், மாலை 3:00 மணிக்கு பொங்கல் வைக்கும் நிகழ்வும், இரவு 7:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது.
கருக்கினில் அமர்ந்தவள் அம்மன்
காஞ்சிபுரம் காவலான் தெரு, தில்லை விநாயகர் கோவிலில் கருக்கினில் அமர்ந்தவள் அம்மனுக்கு ஆடி திருவிழாவையொட்டி நேற்று காலை 7:00 மணிக்கு அம்மன் பூங்கரக குடம் புறப்பாடு நடந்தது. காலை 10:00 மணிக்கு உத்சவம் அம்மன் புஷ்ப அலங்காரத்தில் வீதியுலாவும், மதியம் 2:00 மணிக்கு கூழ்வார்த்தலும், மாலை 3:00 மணிக்கு பொங்கல் வைத்தலும், இரவு 8:00 மணிக்கு கும்பம் படையலிடப்பட்டு அம்மன் வர்ணிப்பு நடந்தது.