/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அம்மன் கோவில்களில் ஆடி திருவிழா
/
அம்மன் கோவில்களில் ஆடி திருவிழா
ADDED : ஆக 04, 2025 01:23 AM

காஞ்சிபுரம்,:ஆடி மூன்றாவது வார ஞாயிற்றுகிழமையான நேற்று, காஞ்சிபுரம் வட்டாரத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் ஆடி திருவிழா விமரிசையாக நடந்தது.
காஞ்சிபுரம் செவிலிமேடு செல்லியம்மன், மாரியம்மன், அரசு காத்தம்மன் கோவிலில் ஆடி திருவிழாவையொட்டி நேற்று காலை 10:30 மணிக்கு செல்லியம்மனுக்கு சீர்வரிசை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. மதியம் 1:30 மணிக்கு அம்மன் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டனர்
மாலை 6:00 மணிக்கு பாலாறாங்கரையில் இருந்து அரசு காத்தமம்மன் பூங்கரம் புறப்பாடு நடந்தது. இரவு 12:00 மணிக்கு மாரியம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்வும், அம்மன் வீதியுலாவும் நடந்தது.
தும்பவனம் மாரியம்மன்
காஞ்சிபுரம் முல்லாபாளையம் தெருவில், தும்பவனம் மாரியம்மனுக்கு ஆடி திருவிழா நடந்தது. இதில், காலை 9:30 மணக்கு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன் வீதியுலா வந்தார். மதியம் 1:00 மணிக்கு கூழ்வார்க்கப்பட்டது. இரவு 7:-00 மணிக்கு அம்மன் வீதியுலாவும், தொடர்ந்து கும்பம் படையலிடப்பட்டது.
கருக்கினில் அமர்ந்தவள் அம்மன்
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் புதுப்பாளையம் தெருவில், கருக்கினில் அமர்ந்தவள் அம்னுக்கு 16வது ஆண்டு ஆடி திருவிழா நேற்று நடந்தது. இதில், கருக்கினில் அமர்ந்தவள் அம்மன், பர்வதவர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.
இதில், காஞ்சி வீர சிலம்பம் பயிற்சி பள்ளி ஆசிரியர்கள் தேவராஜ், குமார் தலைமையில் மாணவ- - மாணவியர் பல்வேறு வகையான சிலம்பத்தில் சாகசம் செய்தனர்.
சந்தவெளி அம்மன்
ஆடி திருவிழாவின் 18ம் நாள் உத்சவமான நேற்று, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, சந்தவெளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து காவேரி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் வளாகத்தில் பொங்கலிட்டு அம்மனுக்கு படையலிட்டனர்.