/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புகார் பெட்டி வேகத்தடை மீது வர்ணம் பூசாததால் விபத்து அபாயம்
/
புகார் பெட்டி வேகத்தடை மீது வர்ணம் பூசாததால் விபத்து அபாயம்
புகார் பெட்டி வேகத்தடை மீது வர்ணம் பூசாததால் விபத்து அபாயம்
புகார் பெட்டி வேகத்தடை மீது வர்ணம் பூசாததால் விபத்து அபாயம்
ADDED : டிச 24, 2024 12:27 AM

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, ஏனாத்துார் எம்.ஜி.ஆர்., நகர் வழியாக, வேடல், கூத்திரம்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலை உள்ளது.
இச்சாலை வழியாக, காஞ்சிபுரம், ஏனாத்துார், செட்டியார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமத்தினர் வேடல், கூத்திரம்பாக்கம், தொடூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று வருகின்றனர்.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையொட்டி கிராமத்திற்கு செல்லும் சாலை துவக்கத்தில் வேகத்தடை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த வேகத்தடை மீது வெள்ளை நிற வர்ணம் பூசப்படவில்லை. மேலும், எச்சரிக்கை பதாகைகளும் வைக்கவில்லை. இதனால், வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, வேதத்தடை மீது வெள்ளை நிற வர்ணம் பூச வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
- சு.முருகேசன், ஏனாத்தூர்.
மின் விளக்கு எரியாததால்
வாகன ஓட்டிகள் அச்சம்
உத்திரமேரூர் -- காஞ்சிபுரம் நெடுஞ்சாலை, வெங்கச்சேரி பகுதியில் உள்ள செய்யாற்றின் மீது உயர்மட்ட பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக, தினமும் 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
பாலத்தின் இருபுறமும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக மின் விளக்குகள் எரியாமல், பாலம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், இரவு நேரங்களில் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
எனவே, பாலத்தில் பழுதடைந்த மின் விளக்குகளை, சரிசெய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ச.வித்யா, வெங்கச்சேரி.
சாலையோர மின்கம்பம் சேதம்
புதிதாக அமைக்க எதிர்பார்ப்பு
வாலாஜாபாத் ஒன்றியம் ஏனாத்துார் சாலையோரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள மின்கம்பத்தில் சிமென்ட் பூச்சு உதிர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன. எந்த நேரத்திலும் நொறுங்கி விழும் அபாயம் உள்ளது.
இதன் காரணமாக, சேதமடைந்த மின்கம்பத்தை தாங்கி பிடிப்பதற்காக, மற்றொரு கம்பம் முட்டு கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பலத்த காற்றுடன் மழை பெய்யும்போது, மின்கம்பம் நொறுங்கி விழுந்தால், பெரிய அளவில் மின்விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, ஏனாத்துார் சாலையோரம் சேதமடைந்த பழைய மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும்.
- கு.சிவகுருநாதன், ஏனாத்துார்.
சேதமடைந்த சாலை
சீரமைக்க கோரிக்கை
காஞ்சிபுரம் ஒன்றியம் கோனேரிகுப்பம் ஊராட்சி, அண்ணா நகர், பாரதி தெரு வழியாக கட்டுமான பணிக்காக செங்கல், மணல், ஜல்லி ஏற்றிக்கொண்டு, கனரக வாகனம் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் சென்றதால், பாரதி தெருவின் வளைவு பகுதியில், சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால், பள்ளத்தில் தேங்கும் மழைநீரால் இருசக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் நிலைதடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே, பாரதி தெருவில், சேதமடைந்த சாலையை பேட்ச் ஒர்க் பணியாக சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கே.கணேசன், காஞ்சிபுரம்.
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
மின்வாரிய ஊழியர்கள் மவுனம்
உத்திரமேரூர் ஒன்றியம் கடல்மங்கலம் கிராமத்தில், மின்வாரிய துறையினர் கம்பங்களை நட்டு, மின்கம்பிகள் வாயிலாக விளைநிலங்களுக்கு மின் விநியோகம் செய்து வருகின்றனர்.
திருப்புலிவனம் -- சாலவாக்கம் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள கம்பத்தில், மின்கம்பிகள் கைக்கு எட்டும் தூரத்தில் செல்கிறது. இதனால், பலத்த காற்று அடித்தால் மின்கம்பிகள் அறுந்து, அவ்வழியே செல்லும் விவசாயிகள், கால்நடைகள் மீது விழுந்து விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மதிவேந்தன், கடல்மங்கலம்.
திறந்த நிலை கிணறு
இரும்பு வலை அமையுமா?
உத்திரமேரூர் ஒன்றியம், மானாம்பதி கிராமத்தில், பால் சேகரிப்பு நிலையம் அருகே, திறந்த நிலை கிணறு உள்ளது. இந்த கிணற்று நீரை, அப்பகுதிவாசிகள் பயன்படுத்தி வந்தனர். தற்போது, கிணறு பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது.
கிணற்றை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள், அவ்வப்போது கிணற்றின் அருகே சென்று விளையாடி வருவது வழக்கம்.
கிணற்றின் மீது இரும்பு வலை தடுப்புகள் இல்லாததால், சிறுவர்கள் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, திறந்த நிலை கிணற்றின் மீது, இரும்பு வலை தடுப்புகள் அமைக்க வேண்டும்.
- மு.முத்தமிழ்செல்வன், மானாம்பதி.