/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விவசாய மலர் உயிர் உரங்களால் நெல் மகசூல் அதிகரிக்கும் வேளாண் தொழில்நுட்ப வல்லுனர் தகவல்
/
விவசாய மலர் உயிர் உரங்களால் நெல் மகசூல் அதிகரிக்கும் வேளாண் தொழில்நுட்ப வல்லுனர் தகவல்
விவசாய மலர் உயிர் உரங்களால் நெல் மகசூல் அதிகரிக்கும் வேளாண் தொழில்நுட்ப வல்லுனர் தகவல்
விவசாய மலர் உயிர் உரங்களால் நெல் மகசூல் அதிகரிக்கும் வேளாண் தொழில்நுட்ப வல்லுனர் தகவல்
ADDED : பிப் 18, 2025 08:31 PM
ஈரோடு:''உயிர் உரங்களால், நெல் சாகுபடியில் கூடுதல் மகசூல் பெறலாம்,'' என, ஈரோடு மாவட்ட வேளாண் அறிவியல் நிலைய உழவியல் தொழில்நுட்ப வல்லுனர் சரவணகுமார் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
ரசாயன இடுபொருட்களின் செலவு, அதனால் மண்ணுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்பை உயிர் உரங்களால் குறைக்கலாம்.
நெல் உற்பத்தியை அதிகரிக்க, முக்கிய ஊட்டச்சத்தான தழை மற்றும் மணிச்சத்து, இயற்கையாக பயிருக்கு எட்டா நிலையே உள்ளது.
இச்சத்தை கூட்டு மற்றும் தனித்து வாழும் பாக்டீரியாக்கள் கிரகித்து, பயிருக்கு வழங்கும். நெல் வயலில் தழை, சாம்பல் சத்தை நிலைநிறுத்த 'அசோஸ்பைரில்லம், அசட்டோபேக்டர், பாஸ்போபேக்டீரியா, அசோலா' ஆகியவை பெரும் பங்காற்றும்.
அசோஸ்பைரில்லம் ஒரு ஹெக்டேருக்கு பரிந்துரைக்கப்படும் விதையுடன், 600 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்தும், நாற்றுகளை பறித்து, அதன் வேர்களை அசோஸ்பைரில்லத்தில் நனைத்தும் நடுவதால், தழைச்சத்து உர பயன்பாடு குறையும்.
இவற்றை பின்பற்ற இயலாதபட்சத்தில், 1 ஹெக்டேருக்கு, 2 கிலோ அசோஸ்பைரில்லம், 25 கிலோ மக்கிய குப்பையில் கலந்து, நடவுக்கு முன் வயலில் இடலாம்.
பாசி வகையைச் சேர்ந்த நீலப்பச்சை பாசி, பெரணி வகை அசோலாவும் நெல் வயலுக்கு தழைச்சத்தை வழங்கும்.
மண்ணில் உள்ள மணிச்சத்தை கரைத்து பயிருக்கு வழங்கும் பாஸ்போபேக்டீரியா, வளர்ச்சி ஊக்கிகளை சுரக்கும்.
மணிச்சத்தின் தேவை குறையும். பயிர் வளர்ச்சி ஊக்குவிக்கப்படும். நெற்பயிரில் மணிச்சத்தை ஈர்த்து வழங்குவதில், மைக்ரோரைசா முக்கிய பங்காற்றும்.
அசோஸ்பைரில்லத்தை போல, இந்த நுண்ணுயிர் உரங்களை பயன்படுத்தி, மணிச்சத்துக்கான ரசாயன இடுபொருட்களின் தேவையை குறைக்கலாம்.
ஹெக்டேருக்கு நெல் வயலில் தனித்து வாழும் பாக்டீரியாவான அசட்டோபேக்டர் 15 கிலோ, நீலப்பச்சை பாசி, 40 கிலோ, இணை வாழ்க்கை நடத்தும் பாக்டீரியாவான அசோஸ்பைரில்லம் 35 கிலோ தழைச்சத்தையும் நிலை நிறுத்தும்.
கூட்டு வாழ்க்கை நடத்தும் அசோலா 40 - 60 கிலோ தழைச்சத்தையும், பசுந்தாள் உரப்பயிர்கள், 80 கிலோ தழைச்சத்தையும் பயிருக்கு வழங்கும்.
இத்தகைய நுண்ணுயிர்கள் வளர் ஊக்கிகளையும் சுரப்பதால், பயிர் செழுமையாக வளரும். மண்ணில் அங்கக சத்துடன் நுண்ணுயிர் சேர்ந்து வாழ்வதால், மண் வளம் பாதுகாக்கப்படும். இதனால், நெல் சாகுபடியில் கூடுதல் மகசூல் பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

