/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் 708 வளர்ச்சி பணிகளுக்கு அனுமதி ரூ.29 கோடி உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு விடுவிப்பு
/
காஞ்சியில் 708 வளர்ச்சி பணிகளுக்கு அனுமதி ரூ.29 கோடி உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு விடுவிப்பு
காஞ்சியில் 708 வளர்ச்சி பணிகளுக்கு அனுமதி ரூ.29 கோடி உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு விடுவிப்பு
காஞ்சியில் 708 வளர்ச்சி பணிகளுக்கு அனுமதி ரூ.29 கோடி உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு விடுவிப்பு
ADDED : நவ 15, 2025 11:29 PM
காஞ்சிபுரம்: மத்திய அரசின் நிதிக் குழு மானியத்தில், 708 பணிகளுக்கு ஊரக வளர்ச்சி துறையினர் நிர்வாக அனுமதி அளித்துள்ளனர். இதற்காக, அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு 29.37 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 274 ஊரக உள்ளாட்சி பகுதிகள் உள்ளன. நிர்வாக வசதிக்காக இவை மாவட்டம், ஒன்றியம், ஊராட்சிகள் என, பிரிக்கப்பட்டு உள்ளன.
ஊரக உள்ளாட்சி நிர்வாகங்களில் இருக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப, சாலை, குடிநீர், கட்டடம் ஆகிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு, ஆண்டிற்கு ஒரு முறை, மத்திய நிதிக் குழு மானியம் வழங்கி வருகிறது.
இந்த நிதியை, இரு தவணைகளாக பிரித்து, அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு, ஊரக வளர்ச்சி துறை நிர்வாகம் உரிய நேரத்தில் பகிர்ந்தளிக்கும்.
ஒதுக்கப்படும் நிதியில், 30 சதவீதம் துாய்மை மற்றும் சுகாதார பணிகள்; 30 சதவீதம் குடிநீர் வளர்ச்சி திட்டங்கள்; 40 சதவீதம் அரசு கட்டடங்களை புதுப்பிக்கும் பணிகள் செய்ய வேண்டும்.
அந்த வகையில், கடந்த ஆண்டு மத்திய நிதிக் குழு மானியமாக 47.84 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 246 பணிகள் தேர்வு செய்யப்பட்டன. மாவட்டம் முழுதும் இப்பணிகள் தேர்வு செய்யப்பட்டு தொடர்ந்து நடந்து வருகின்றன.
இந்த பணிகளில், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தேர்வு செய்த பணிகளே அதிகம் எனவும், உள்ளாட்சி நிர்வாகங்கள் தேர்வு செய்தது குறைவு எனவும், கடந்த ஆண்டு புகார் எழுந்தது.
இதனால், கிராமப்புற பகுதிகளில் குடிநீர் வசதி ஏற்படுத்துவது உள்ளிட்ட முக்கிய பணிகள் நடக்கவில்லை. இதுகுறித்து பிரச்னை எழவே, இனி வரும் காலங்களில் உள்ளாட்சி நிர்வாகங்கள் தேர்வு செய்யும் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என, ஊரக வளர்ச்சி துறையினர் உறுதியளித்திருந்தனர்.
கடந்த அக்டோபர் மாதம், 15வது மத்திய நிதிக்குழு மானிய பணிகளுக்கு, 52.95 கோடி ரூபாய் ஒதுக்கியது. பணிகளை தேர்வு செய்யாமல், உள்ளாட்சி நிர்வாகங்கள் அலட்சியமாக இருந்தன.
ஒரு வழியாக, ஊராட்சிகள், ஒன்றிய நிர்வாகங்கள் இணைந்து, பணிகளை தேர்வு செய்து, ஊரக வளர்ச்சி துறையினரிடம் அளித்துள்ளது.
இதில், உத்திரமேரூர் கிராம ஊராட்சிகள் மட்டும் பணி தேர்வு செய்து கொடுக்கவில்லை. பிற நிர்வாகங்களில், 29.37 கோடி ரூபாய்க்கு, 708 பணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தேர்வு செய்த பணிகள் அனைத்தையும், மார்ச் இறுதிக்குள் முடிக்க வேண்டும் என, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் ஊராட்சிகள் கூட்டமைப்பு குழு தலைவர் அஜய்குமார் கூறியதாவது:
கடந்த ஆண்டு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு வேலி அமைக்க வேண்டும் என, பணிகளை அதிகாரிகளே தேர்வு செய்து செய்தனர். ஊராட்சிக்கு தேவையான வளர்ச்சி பணிகளை, உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்வு செய்வதை ஒப்புதல் அளிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தோம்.
அதை ஏற்று, நடப்பாண்டு வளர்ச்சி பணிகளை தேர்வு செய்து கொடுத்ததில், துறை அதிகாரிகள் நிர்வாக அனுமதி அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இதேபோல், ஆண்டுதோறும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்வு செய்து கொடுக்கும் பணிகளுக்கு, துறை அதிகாரிகள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 708 பணிகளுக்கு நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டு, அதற்குரிய 29.37 கோடி ரூபாய் அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளை, மார்ச் மாதத்திற்கு முன் முடிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எஞ்சி இருக்கும் நிதிக்கு ஏற்ப, பணிகளை தேர்வு செய்து, நிர்வாக அனுமதி அளித்து, விரைந்து முடிக்க அறிவுரை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

