அதிகரிப்பு : கிணறுகளில் இருந்து நிலத்தடி நீர் திருடுவது :வ்ணிக ரீதியாக விற்பதால் விவசாயம் பாதிப்பு
அதிகரிப்பு : கிணறுகளில் இருந்து நிலத்தடி நீர் திருடுவது :வ்ணிக ரீதியாக விற்பதால் விவசாயம் பாதிப்பு
UPDATED : ஆக 15, 2026 04:01 AM
ADDED : ஆக 14, 2026 07:24 PM

காஞ்சிபுரம்: தேவரியம்பாக்கம் பகுதியில் உள்ள விவசாய கிணறுகளில் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் சட்டவிரோதமாக உறிஞ்சப்பட்டு, வணிக ரீதியாக விற்பனை செய்யப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், விவசாயம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாதில், அதிகளவு நெல் மற்றும் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, தேவரியம்பாக்கம் கிராமத்தில் அதிகளவில் விவசாயம் நடக்கிறது.
இங்குள்ள விவசாயிகள், கிணற்று பாசனத்தை நம்பியே நெல் பயிரிடுகின்றனர். இதற்காக, விவசாய நிலங்களில் கிணறுகள் அமைத்துள்ளனர். சமீபகாலமாக, தனியார் சிலர் தங்கள் விவசாய கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளை வணிக கூடங்களாக மாற்றியுள்ளனர்.
விவசாய பயன்பாட்டிற்காக அரசு வழங்கும் இலவச மின்சாரத்தை தவறாக பயன்படுத்தி, ராட்சத மோட்டார்கள் மூலம் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு வருகிறது.
இவ்வாறு உறிஞ்சப்படும் தண்ணீர், தினமும் நுாற்றுக்கணக்கான டிராக்டர் மற்றும் டேங்கர் லாரிகள் மூலம் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதனால், அருகே உள்ள கிணறுகளில் தண்ணீர் குறைந்து, விவசாயம் பாதிக்கப்படுகிறது.
தொடர்ந்து நிலத்தடி நீர் சுரண்டப்படுவதால், இப்பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன், 20 அடியில் கிடைத்த தண்ணீர், தற்போது 100 அடிக்கும் கீழே சென்றுவிட்டது.
எனவே, மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து, அனுமதியின்றி விவசாய கிணறுகளில் இருந்து எடுக்கும் தண்ணீரை வணிக ரீதியாக விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எவ்வித அனுமதியும் இன்றி நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு வருகிறது. வருவாய் துறையினரும், காவல் துறையினரும் இணைந்து, சட்டவிரோத செயலை கண்டுகொள்ளாமல் மவுனமாக இருப்பது ஏன் என, தெரியவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். - லாரன்ஸ், மாவட்ட தலைவர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம். காஞ்சிபுரம்.
