/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'புல்லட்'டில் சென்ற பெண் போலீசார் கார் மோதியதில் இருவரும் உயிரிழப்பு
/
'புல்லட்'டில் சென்ற பெண் போலீசார் கார் மோதியதில் இருவரும் உயிரிழப்பு
'புல்லட்'டில் சென்ற பெண் போலீசார் கார் மோதியதில் இருவரும் உயிரிழப்பு
'புல்லட்'டில் சென்ற பெண் போலீசார் கார் மோதியதில் இருவரும் உயிரிழப்பு
ADDED : நவ 05, 2024 07:05 AM

செங்குன்றம் : திருவொற்றியூர், அண்ணாமலை நகர் 5வது தெருவைச் சேர்ந்தவர் ஜான். இவரது மனைவி ஜெயஸ்ரீ, 38. மதுரையை பூர்வீகமாக கொண்ட இவர், மாதவரம் பால் பண்ணை மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்.
அவருடன் பணியில் இருந்த, புளியந்தோப்பு காவலர் குடியிருப்பைச் சேர்ந்த நித்யா, 35. இவரது பூர்விகம் திண்டுக்கல். இருவரும், பைக்கில் தொலைதுார பயணம் மேற்கொள்வதில் ஆர்வம் உடையவர்கள்.
இதில், ஜெயஸ்ரீ பைக்கிலேயே சமீபத்தில் லடாக் சென்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நேற்று அதிகாலை நித்யாவுக்கு சொந்தமான 'ராயல் என்பீல்ட் புல்லட்'டில், இருவரும் மேல்மருவத்துார் சென்றனர்.
அதிகாலை 2:00 மணியளவில் மேல்மருவத்துார் பத்மாவதி திருமண மண்டபம் அருகே செல்லும்போது, இவர்களுக்கு பின்னால் வந்த புதுச்சேரியை சேர்ந்த 'டாடா இண்டிகோ' என்ற கார், புல்லட் மீது வேகமாக மோதியது.
இதில் ஜெயஸ்ரீ, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நித்யாவிற்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலை உயிரிழந்தார்.
இது குறித்து மேல்மருவத்துார் போலீசார் விசாரிக்கின்றனர். விபத்தில் இறந்த போலீஸ் உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீயின் உடல், மதுராந்தகம் அரசு மருத்துவமனையிலும், நித்யாவின் உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை சவக்கிடங்கிலும் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விசாரணையில், இருவரும் அலுவல் காரணமாக செல்லவில்லை என்பதும், சொந்த விஷயத்திற்காகவே சென்றதும் தெரியவந்துள்ளது. விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுனரான, திருவண்ணாமலையைச் சேர்ந்த மதன்குமார் என்பவரிடம் விசாரிக்கின்றனர்.

