/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செங்கை 376; காஞ்சி 395; திருவள்ளூர் 487வது இடம் துாய்மை நகரங்கள் பட்டியலில் பின்தங்கிய அவலம்
/
செங்கை 376; காஞ்சி 395; திருவள்ளூர் 487வது இடம் துாய்மை நகரங்கள் பட்டியலில் பின்தங்கிய அவலம்
செங்கை 376; காஞ்சி 395; திருவள்ளூர் 487வது இடம் துாய்மை நகரங்கள் பட்டியலில் பின்தங்கிய அவலம்
செங்கை 376; காஞ்சி 395; திருவள்ளூர் 487வது இடம் துாய்மை நகரங்கள் பட்டியலில் பின்தங்கிய அவலம்
ADDED : ஜூலை 20, 2025 12:46 AM

நாட்டில் உள்ள நகரங்களின் துாய்மையை கணக்கிட்டு, அவற்றுக்கான தரவரிசையை, மத்திய அரசு 2016 முதல் வழங்கி வருகிறது. இதற்காகவே, துாய்மை இந்தியா திட்டம் உருவாக்கப்பட்டது. இதில், நகரங்களின் துாய்மை கணக்கிடப்படுகிறது.
திடக்கழிவு மேலாண் மை, அன்றாடம் குப்பையை தரம் பிரிப்பது, சாலைகளின் துாய்மை, 'ஸ்வச்சத்தா' செயலியில் வரும் புகார் மீதான நடவடிக்கை போன்றவை ஆய்வு செய்யப்படுகின்றன.
குப்பை மற்றும் கழிவுநீர் மேலாண்மை, குடியிருப்பு பகுதிகள் மற்றும் நீர்நிலைகளில் துாய்மை, பொது கழிப்பறை சுகாதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் நகரங்களுக்கு வழங்கப்படும் வரிசை பட்டியலை, மத்திய அரசு வெளியிட்டு வருகிறது.
இதில், நாட்டின் 12 புராதன நகரங்களில் ஒன்றான காஞ்சிபுரம் மாநகராட்சி, 50,000 - 3 லட்சம் பேர் வசிக்கும் நகரங்கள் பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் உள்ள 820 நகரங்களில், காஞ்சிபுரம் மாநகராட்சி 395வது இடத்தை பிடித்துள்ளது.
வீடுகளில் இருந்து குப்பை சேகரிப்பு, நீர்நிலைகளின் துாய்மை, பொது கழிப்பறை துாய்மை, பள்ளி, பொது இடங்களின் துாய்மை என, பல வகைப்பாடுகளின் கீழ், 10,000 புள்ளிகளுக்கு, காஞ்சிபுரம் மாநகராட்சி 7,028 புள்ளிகள் பெற்றுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும், நுாற்றுக்கணக்கான நகரங்களுக்கு பிந்தைய இடத்தையே காஞ்சிபுரம் மாநகராட்சி பெற்று வருகிறது. மொத்தம் 2.5 லட்சம் பேர் வசிக்கும் நகரை சுத்தமாக வைத்துக்கொள்ள, காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரிகள் சிரமப்படுவது, இந்த பட்டியல் மூலம் அம்பலமாகியுள்ளது.
நகர் முழுதும் பல்வேறு இடங்களில் குப்பை, கழிவு பொருட்கள் குவியலாக கொட்டி வைத்திருப்பதும், சுகாதாரமற்ற நிலையில் துர்நாற்றம் வீசுவதும் தொடர்கதையாகி வருகிறது. துாய்மை பட்டியலில் செங்கல்பட்டு நகரம் 10,000 புள்ளிகளுக்கு 7,140 புள்ளிகளை பெற்று, 376வது இடத்தில் உள்ளது. திருவள்ளூர் ௪௮௭வது இடத்தை பிடித்துள்ளது.
கடந்த 2023ல் வெளியிடப்பட்ட நாட்டின் சுத்தமான நகரங்கள் தரவரிசை பட்டியலில், காஞ்சிபுரம் 263வது இடம் வகித்தது. தற்போது, பின்னோக்கி சென்று 395வது இடம் பிடித்துள்ளது. சுகாதாரத்தில், காஞ்சிபுரம் பின்தங்கி இருப்பதை காட்டுகிறது. பொது இடங்களில் குப்பை கொட்டுவதை, மக்கள் தவிர்க்க வேண்டும். குப்பையை முறையாக கையாள மாநகராட்சி தயாராக வேண்டும்.
தி.மோகன்,
சமூக ஆர்வலர், காஞ்சிபுரம்.
- நமது நிருபர் -

