ADDED : நவ 07, 2024 09:39 PM
காஞ்சிபுரம்:நாட்டு நலப் பணித் திட்ட புதிய தன்னார்வலர்களுக்கான மாநிலம் அளவிலான இரண்டுநாள் புத்தாக்கப் பயிற்சி முகாம் நிறைவு விழா, காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதல்வர் கலைராம வெங்கடேசன் தலைமையில் நடந்தது.
கடந்த 5ம் தேதி துவங்கிய இம்முகாம் நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. இதில், சென்னை சமூக பணிகள் பள்ளியின் சமூக பணிகள் பயிற்றுநர் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சாரா கருணாகரன், நாட்டு நலப் பணித் திட்டத்தின் நோக்கம், இலக்கு மற்றும் அடிப்படை குறித்தும் இதனால், கிடைக்கும் பயன்கள் குறித்து விளக்கவுரையாற்றினார்.
சென்னை சமூக பணிகள் பள்ளியின் பேராசிரியர் சத்யா, நாட்டு நலப் பணித் திட்ட செயல்பாடு குறித்தும் அவற்றை ஆவணமாக்குவது குறித்தும் விளக்கினார். இதில், சங்கரா கல்லுாரி மற்றும் பிற கல்லுாரியைச் சேர்ந்த நாட்டு நலப் பணித் திட்ட முதலாம் ஆண்டு மாணவர்கள் 150 பேர் பங்கேற்றனர்.
இதில், கல்லுாரி, மாணவ- - மாணவியர் திருப்புட்குழிக்கு சூழலியல் களப்பயணம் மேற்கொண்டனர். இதில், பருவநிலை மாற்றம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து திருப்புட்குழி ஏரிக்கரையில் 10,000 பனை விதைகள் நடவு செய்தனர்.
பயிற்சி முகாம் நிறைவு நாளில், முதலுதவி குறித்தும், மத்திய, மாநில அரசின் சுயதொழில் திட்டங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் கணபதி வரவேற்றார். முனைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.