/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
26 இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்தாமல் இழுத்தடிப்பு: உள்ளாட்சி பதவியிடங்கள் காலியாவது அதிகரிப்பு
/
26 இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்தாமல் இழுத்தடிப்பு: உள்ளாட்சி பதவியிடங்கள் காலியாவது அதிகரிப்பு
26 இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்தாமல் இழுத்தடிப்பு: உள்ளாட்சி பதவியிடங்கள் காலியாவது அதிகரிப்பு
26 இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்தாமல் இழுத்தடிப்பு: உள்ளாட்சி பதவியிடங்கள் காலியாவது அதிகரிப்பு
ADDED : நவ 22, 2024 08:00 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், காலியாக உள்ள மூன்று கிராம ஊராட்சி தலைவர், இரு ஊராட்சி துணை தலைவர்கள், 20 வார்டு உறுப்பினர்கள், ஒரு பேரூராட்சி வார்டு உறுப்பினர் என, 26 பதவியிடங்களுக்கு, மாநில தேர்தல் கமிஷன், இடைத்தேர்தல் நடத்தாமல் இழுத்தடித்து வருகிறது. இதனால், ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகளில் பாதிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகம் முழுதும், 2021ல் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு, அந்தாண்டு அக்டோபர் மாதம் தேர்தல் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, அக்டோபர் மாதம் 6ம் தேதி முதற்கட்டமாகவும், 9ம் தேதி இரண்டாம் கட்டமாகவும் தேர்தல் நடந்து முடிந்தன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஐந்து ஒன்றியங்களில் 11 மாவட்ட கவுன்சிலர்கள், 98 ஒன்றிய கவுன்சிலர்கள் 273 ஊராட்சி தலைவர்கள், 1,938 வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் வெற்றி பெற்று பதவி ஏற்றுக் கொண்டனர்.
அதேபோல, 2022ல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிக்கான தேர்தல் நடத்தப்பட்டு பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள், பதவியேற்றுக் கொண்டு பணியாற்றி வருகின்றனர்.
தேர்தல் முடிந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலான நிலையில், மாவட்டத்தின் பல்வேறு ஊராட்சிகளில் காலியாக உள்ள ஊராட்சி தலைவர்கள், துணை தலைவர், பேரூராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களுக்கு, தற்போது வரை இடைத்தேர்தல் நடத்தாமல், மாநில தேர்தல் கமிஷன் மெத்தனமாக இருந்து வருகிறது.
பதவியேற்ற மக்கள் பிரதிநிதிகளில் சிலர் வயது மூப்பு, உடல் நிலை சரியில்லாத காரணம், கொலை போன்ற காரணங்களால் இறந்துள்ளனர். சிலர், பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
அவ்வாறு காலியான மக்கள் பிரதிநிதிகளின் பதவியிடங்களுக்கு, ஆறு மாதங்களில் தமிழக மாநில தேர்தல் கமிஷன், தேர்தல் நடத்த வேண்டும்.
ஆனால், தேர்தல் நடத்தாமல், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், மூன்று ஊராட்சி தலைவர்கள் பதவியிடங்கள் காலியாக உள்ளன. இதில், இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல, ஊராட்சிகளில் உள்ள வார்டு உறுப்பினர்களில், 20 பதவியிடங்கள் இன்னமும் காலியாக உள்ளன. இந்த பதவியிடங்களுக்கு எப்போது தேர்தல் நடத்தப்படும் என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
குன்றத்துார் ஒன்றியம், செரப்பணஞ்சேரி ஊராட்சியின் துணை தலைவர் பதவியிடமும், ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியின் 15 வார்டு உறுப்பினர் பதவியிடமும் காலியாக உள்ளன.
இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட ஏகனாபுரம் ஊராட்சியின் துணை தலைவர் திவ்யா, 35, என்பவர், நேற்று முன்தினம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவர், பரந்துார் விமான நிலைய எதிர்ப்பு குழுவில் இடம் பெற்று போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், திடீரென தற்கொலை செய்து கொண்டது கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊராட்சி தலைவர் பதவியிடம் காலியான பின், துணை தலைவருக்கு அப்பதவிக்கான அதிகாரம் தற்காலிகமாக வழங்கப்படுகிறது.
அதேபோல, காலியாக இருக்கும் வார்டு உறுப்பினர் பதவிக்கான பணிகளை, அந்தந்த ஊராட்சி நிர்வாகம் கூடுதல் பொறுப்பாக சேர்த்து பார்க்க வேண்டியுள்ளது. காலி பதவியிடங்கள் உள்ள ஊராட்சிகளில், பல்வேறு குழப்பங்கள் நீடிக்கிறது.
கிராம மக்களின் தேவைகளை அறிந்து, ஊராட்சி மன்றத்திடம் கேட்டு பெறவும், மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கவும் ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்களின் பதவிகள் பூர்த்தி செய்ய வேண்டும்.
ஊராட்சிகளின் நிர்வாக நலனுக்காக, விரைந்து தேர்தலை நடத்த வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக, மாநில தேர்தல் கமிஷனிடம் இருந்து எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை. அதுபற்றி உத்தரவுகள் வந்தால், தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி,
காஞ்சிபுரம்.