/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கோவில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு அபிஷேகம் பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து தரிசனம்
/
கோவில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு அபிஷேகம் பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து தரிசனம்
கோவில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு அபிஷேகம் பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து தரிசனம்
கோவில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு அபிஷேகம் பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து தரிசனம்
ADDED : ஏப் 15, 2025 01:04 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், தமிழ் புத்தாண்டையொட்டி நேற்று, காலை 10:00 மணிக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியருடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள் மாட வீதிகளில் உலா வந்தார். இரவு 7:30 மணிக்கு பெருமாள் கோவிலில் எழுந்தருளினார், கண்ணாடி அறையில், திருவாராதனம், நிவேதனம் உள்ளிட்டவை நடந்தது.
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நேற்று, காலை 5:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம் மற்றும் விஷுக்கனி தரிசனம் நடந்தது. இரவு தங்க தேரோட்டம் நடந்தது. இதில், அலங்கரிக்கப்பட்ட தங்கதேரில் லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய காமாட்சியம்மன், நான்கு ராஜ வீதிகளிலும் பவனி வந்தார்.
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் புதுப்பாளையம் தெரு தென்கோடியில் உள்ள ருத்ரகோடீஸ்வரருக்கு திருக்கயிலாய வாத்தியங்கள் இசைக்க மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், மஹா தீபாராதனையும், பக்தர்களுககு அன்னபிரசாதம் வழங்கும் நிகழ்வும் நடந்தது. சின்ன காஞ்சிபுரம் திருக்கச்சியம்பதி விநாயகர் சந்தனகாப்பு மற்றும் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலை கூழமந்தல் ஏரிக்கரை, உக்கம்பெரும்பாக்கத்தில் அமைந்துள்ள 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில், முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான், அத்தி ருத்ராட்ச லிங்கேஸ்வரர், 27 நட்சத்திர அதிதேவதைகள், உள்ளிட்ட தேவதைகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. விசுவாவசு ஆண்டின் பஞ்சாங்க பலன்கள் வாசிக்கப்பட்டது. சுவாமிக்கு, இனிப்பு, புளிப்பு, கசப்பு, காரம், துவர்ப்பு, உப்பு ஆகிய ஆறு சுவை கொண்ட படையல் நைவேத்தியம் வைக்கப்பட்டது.
காஞ்சிபுரம் அடுத்த, அய்யங்கார்குளம் சஞ்சீவிராயர் கோவில் கிரிவலப்பாதையில் அமைந்துள்ள அனுமன்வால் கோட்டை பூர்ணா புஷ்கலா சமேத தர்மசாஸ்தாவுக்கு 5ம் ஆண்டு கனி அலங்கார விழா நடந்தது.
இதில், சுவாமிக்கு ஆப்பிள், மாதுளை, கொய்யா, சாத்துக்குடி, சப்போட்டா, அன்னாசி, தர்பூசணி உள்ளிட்ட பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் அடுத்த, நாயகன்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு அபிஷேக அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய சிவசுப்பிரமணிய சுவாமி முக்கிய வீதி வழியாக பவனி வந்தார்.
புத்தாண்டையொட்டி காஞ்சிபுரம் காமாட்சியம்மன், குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில், கச்சபேஸ்வரர் கோவில், ஏகாம்பரநாதர், வரதராஜ பெருமாள் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.