எல்லப்பா நகர் வடிகால்வாய் துார்வாரும் பணி தொடக்கம்
எல்லப்பா நகர் வடிகால்வாய் துார்வாரும் பணி தொடக்கம்
UPDATED : அக் 23, 2026 08:32 PM
ADDED : அக் 23, 2026 08:26 PM

காஞ்சிபுரம்: வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், காஞ்சிபுரத்தில் வெள்ள பாதிப்பை தடுக்கும் வகையில், 10வது வார்டு எல்லப்பா நகரில் உள்ள மழைநீர் வடிகால்வாயை துார்வாரும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சி 10வது வார்டில், கைலாசநாதர் கோவிலை சுற்றியுள்ள பகுதியில் பெய்யும் மழைநீர் மஞ்சள்நீர் கால்வாய் மூலம் வெளியேறும் வகையில், எல்லப்பா நகரில் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கால்வாயில் களை செடிகள் வளர்ந்து, மண் திட்டுகளால் துார்ந்துள்ளதால், மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டது. குடியிருப்புகளை மழைநீர் சூழ்வதை தவிர்க்க, வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் சார்பில், எல்லப்பா நகர் மழைநீர் வடிகால்வாயை பொக்லைன் இயந்திரம் மூலம் துார்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கால்வாயை துார்வாரும்போது, கால்வாயின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
