மழைக்கு சகதியாகும் உத்திரமேரூர் போக்குவரத்து பணிமனை வளாகம்
மழைக்கு சகதியாகும் உத்திரமேரூர் போக்குவரத்து பணிமனை வளாகம்
UPDATED : அக் 23, 2026 08:32 PM
ADDED : அக் 23, 2026 08:26 PM

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அரசு போக்குவரத்து பணிமனை, மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி சகதியாக மாறுவதால், ஓட்டுநர், நடத்துநர் மற்றும் ஊழியர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
உத்திரமேரூரில் செயல்படும் அரசு போக்குவரத்து பணிமனை மூலம், உத்திரமேரூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில், 31 அரசு பேருந்துகள் இயங்குகின்றன.
இங்கு, 150க்கும் மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இப்பணிமனைக்கு சுற்றுச்சுவர் வசதி இல்லாததால், தெரு நாய்கள் மற்றும் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள், வளாகத்திற்குள் திரிகின்றன.
மேலும், இரவு நேரங்களில் நாய்கள் திரிவதால், போக்குவரத்து ஊழியர்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர். மேலும், பணிமனை உள்பகுதியில் தரைதளம் ஏற்படுத்தாமல் உள்ளது. இதனால், மழைக்காலங்களில் பணிமனையின் தரைப்பகுதி சகதியாக மாறி, பேருந்து ஊழியர்கள் சிரமப்படுகின்றனர்.
எனவே, உத்திரமேரூர் போக்குவரத்து பணிமனை தரைப்பகுதியில், தார் அல்லது கான்கிரீட் தரை ஏற்படுத்துவதோடு, பணிமனையில் இருந்து பிரதான சாலை வரை கூடுதல் மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு, காலை – மாலை நேரங்களில், கூடுதலாக பேருந்துகள் இயக்க வேண்டும் என, போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
