/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கொள்முதல் செய்த 650 மூட்டை நெல் தொகை கிடைக்காமல் விவசாயிகள் புகார்
/
கொள்முதல் செய்த 650 மூட்டை நெல் தொகை கிடைக்காமல் விவசாயிகள் புகார்
கொள்முதல் செய்த 650 மூட்டை நெல் தொகை கிடைக்காமல் விவசாயிகள் புகார்
கொள்முதல் செய்த 650 மூட்டை நெல் தொகை கிடைக்காமல் விவசாயிகள் புகார்
ADDED : ஆக 19, 2025 12:31 AM
காஞ்சிபுரம், 'கம்மாளம்பூண்டி கிராமத்தில், நெல் கொள்முதல் நிலையத்தில், கொள்முதல் செய்த 650 மூட்டை நெல்லுக்கான தொகை கிடைக்கவில்லை' என, நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷிடம், விவசாயிகள் புகார் மனு அளித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் வளாகத்தில் உள்ள கூட்டரங்கில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் நேற்று நடந்தது.
இதில், பட்டா, உதவித்தொகை, வேலைவாய்ப்பு, ரேஷன் அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றம், அடிப்படை தேவை உள்ளிட்ட பல்வேறு வகையான கோரிக்கை தொடர்பாக, 381 மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்களை பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் அளித்த மனு:
உத்திரமேரூர் தாலுகாவில் உள்ள கம்மாளம்பூண்டி கிராமத்தில், மூன்று மாதங்களுக்கு முன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நடத்திய நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளின் 650 மூட்டை நெல் கொள் முதல் செய்யப்பட்டன.
இந்த நெல் மூட்டைகளுக்கு இதுவரை ரசீதும் வழங்கப்படவில்லை; வங்கியில் பணமும் வரவு வைக்கப்படவில்லை. இதுபற்றி, மண்டல மேலாளரிடம் கேட்டால், 'வங்கியில் வரவு வைக்கப்படும்' என்கிறார்.
கம்மாளம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ஆறு விவசாயிகளின், 650 மூட்டை நெல்லுக்கான உரிய தொகையை, வங்கியில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.