/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பெருகிவரும் மயில்களால் விவசாயிகள் அச்சம் விவசாயம் பாதிக்கும் என புலம்பல்
/
பெருகிவரும் மயில்களால் விவசாயிகள் அச்சம் விவசாயம் பாதிக்கும் என புலம்பல்
பெருகிவரும் மயில்களால் விவசாயிகள் அச்சம் விவசாயம் பாதிக்கும் என புலம்பல்
பெருகிவரும் மயில்களால் விவசாயிகள் அச்சம் விவசாயம் பாதிக்கும் என புலம்பல்
ADDED : ஏப் 25, 2025 01:28 AM

வாலாஜாபாத்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், அதிகரித்து வரும் மயில்களால் வேளாண் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என, விவசாயிகள் அச்சத்திற்கு உள்ளாகி வருகின்றனர். நிலங்களையொட்டிய வனத்தில் வசிக்கும் மயில்கள், அடர்வனப் பகுதிக்கு இடம் மாறி செல்ல தக்க வகையிலான நடவடிக்கை தேவை என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவின் தேசிய பறவையாக திகழும் மயில், காடும், காடு சார்ந்த பகுதிகளில் வாழ்ந்து வருகிறது.
இவை காடுகளில் கிடைக்கும் விட்டில் உள்ளிட்ட சிறு பூச்சிக்கள், பூரான் மற்றும் தானியங்களை உணவாக உட்கொள்கின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கணிசமான அளவு வன நிலப்பரப்பு உள்ளதால், காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஒன்றிய கிராமங்களில் கடந்த பல ஆண்டுகளாகவே மயில்கள் வசித்து வருகின்றன.
கடந்த ஆண்டுகளில் மலைப் பகுதிகள், காடுகள் மற்றும் முட்புதர்களிலும் வாழ்ந்து வந்த மயில்கள், காடுகள் அழிப்பு போன்ற காரணங்களால் வனத்தை விட்டு வெளியேறி, தற்போது விவசாய விளை நிலங்களுக்கு படையெடுக்க துவங்கி உள்ளன.
இதனால், அதிசய பறவையாக பார்க்கப்பட்ட மயில்கள், தற்போது ஆங்காங்கே கூட்டம், கூட்டமாக காணப்படுவதால், வளர்ப்பு பிராணிகள் போல கண்களுக்கு தென்பட துவங்கி உள்ளது.
விவசாய நிலங்களில் பயிரிடப்படும் நெற்பயிர், சோளம், கேழ்வரகு, எள்ளு, உளுந்து உள்ளிட்ட தானிய வகையிலான உணவுகளை உட்கொள்ள துவங்கி உள்ளதால் மயில்களை கண்டு ரசித்து வந்த மனிதர்கள், பயிர்களை அழிக்க வந்த பறவையென அச்சப்படுகின்றனர். காட்டுப்பன்றிகளுக்கு அடுத்து மயில்களையும் விவசாயிகளின் வில்லனாக பார்க்கும் நிலை உள்ளது.
உத்திரமேரூர் ஒன்றியம், அருங்குன்றம் கிராமத்தை சேர்ந்த விவசாயியும், தமிழ்நாடு விவசாயிகள் இயக்க மாநில செயலாளருமான தேவராஜன் கூறியதாவது:
மயில் அழகியதாகவும், நமது தேசிய பறவையாகவும் திகழ்கிறது.
மயில்களின் தோற்றத்தை குழந்தைகள் முதல் அனைத்து தரப்பினரும் ரசிக்கவே செய்கிறோம்.
கடந்த சில ஆண்டுகளாக காஞ்சிபுரம் மாவட்டம் முழுக்க மயில்களின் பெருக்கம் மிகவும் அதிகரித்து விட்டது.
குடியிருப்பு பகுதியான சாலவாக்கம் அடுத்த அருங்குன்றம் மற்றும் அப்பகுதியை சுற்றி உள்ள பட்டா, காவணிப்பாக்கம், பேரணக்காவூர், பழவேரி, பினாயூர், எடமச்சி, பொற்பந்தல் உள்ளிட்ட கிராமங்களில் காடுகளையொட்டிய விவசாய நிலங்களில் அதிகாலை மற்றும் அந்தி மாலை நேரங்களில் ஏராளமான மயில்கள், உலாவுவதை காண முடிகிறது.
இந்த மயில்கள், வனத்தை ஒட்டியுள்ள விளைநிலங்களில் சாகுபடி செய்யப்படும் நிலக்கடலை, நெல், கேழ்வரகு, உளுந்து, பச்சைப் பயறு, காராமணி உள்ளிட்ட தானியம், எண்ணெய் வித்துக்கள், பயறு வகைகளை சேதப்படுத்த துவங்கி உள்ளன.
மயில்கள் மேலும் பெருகி கூட்டம், கூட்டமாக வயலுக்குள் புகுந்தால், வேளாண் பயிர்கள் முற்றிலும் சேதமாகும்.
எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் வனத்தை ஒட்டி வசிக்கும் மயில்கள், அடர்வனப் பகுதிக்கு இடம் மாறி செல்லத்தக்க வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மயில்களுக்கு தேவையான
இரை மற்றும் தண்ணீர் வசதியை வனத்தில் கிடைக்க செய்வதன் வாயிலாக விளை நிலங்களில் வராமல் தடுக்க முயற்சிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தேசிய பறவையான மயில் எண்ணிக்கை கடந்த 2000ம் ஆண்டில் இருந்தே அதிகரித்து வருகிறது.
அவை இன்று ஒரு இடத்திலும், நாளை மற்றொரு இடத்திலும் குருவிகள் போல இடம் மாறக்கூடிய பறவை என்பதால், துல்லியமாக கணக்கெடுத்து எண்ணிக்கை கூற இயலாது.
மயில்களின் பெருக்கம் நரிகளால் கட்டுப்பாடானது. நரிகளின் இனப்பெருக்கம் மெல்ல அழிந்து வருகிறது.
சுதந்திரமாக திரியும் மயில்களை இடம் மாற்றுவது என்பது சாத்தியம் இல்லாதது.
நரிகளின் பெருக்கத்துக்கான நடவடிக்கைகள் மூலம் மயில்களின் பெருக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.