/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நடவாவி கிணற்றுக்கு மின் இணைப்பு மாஜி அறங்காவலர் கலெக்டரிடம் மனு
/
நடவாவி கிணற்றுக்கு மின் இணைப்பு மாஜி அறங்காவலர் கலெக்டரிடம் மனு
நடவாவி கிணற்றுக்கு மின் இணைப்பு மாஜி அறங்காவலர் கலெக்டரிடம் மனு
நடவாவி கிணற்றுக்கு மின் இணைப்பு மாஜி அறங்காவலர் கலெக்டரிடம் மனு
ADDED : டிச 21, 2024 12:42 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம் அய்யங்கார்குளம் கிராமத்தில், விஜயநகர மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட சஞ்சீவிராய சுவாமி கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவின் பின்புறம், ‛தாதசமுத்திரம்' என அழைக்கப்படும், கோவில் தெப்பக்குளத்தின் அருகே நடவாவி கிணறு உள்ளது.
பூமிக்கடியில் அழகிய மண்டபத்தின் நடுவில் கிணறு அமைந்துள்ளது. கிணற்று தண்ணீர் மண்டபம் முழுதும் நிறைந்திருக்கும். மண்டபம் உள்ளே செல்வதற்கு கருங்கற்களால் ஆன படிகள் கட்டப்பட்டுள்ளன. கிணற்றில் மேற்பகுதியில் இருந்து பார்த்தால் தண்ணீர் மட்டுமே தெரியும்.
ஆண்டுதோறும் சித்திரை பவுர்ணமியன்று, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் நடவாவி கிணற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதையொட்டி, கிணற்றில் உள்ள தண்ணீர் முழுதும் வெளியேற்றப்பட்டு மண்டபம் முழுதும் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்படும்.
நடவாவி கிணற்றை காண, தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஆனால், இப்பகுதியில் மின்விளக்கு இல்லாததால், இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. சித்ரா பவுர்ணமி உற்சவம் நடைபெறும் நாட்களில், கிணற்றுக்குள் அமைக்கப்படும் மின்விளக்குகளுக்கு ஜெனரேட்டர் வாயிலாகவே மின்சாரம் பெறப்படுகிறது.
இது தொடர்பாக, சஞ்சீவிராயர் கோவில் முன்னாள் அறங்காவலர் சிவகுமார், கலெக்டரிடம் அளித்த மனு விபரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் அய்யங்கார்குளம் கிராமத்தில் உள்ள சஞ்சீவிராயர் கோவில், ஹிந்து அறநிலையத் துறை இணை ஆணையர் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான குளம், 133 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில், நடவாவி கிணறும் அடங்கும்.
குளக்கரையில் இருந்து நடவாவி கிணறு அரை கி.மீ.,யில் உள்ளது. இந்த கிணறு முழுமையாக நிலப்பரப்பில் உள்ளது. ஆனால், வருவாய் துறை அடங்கல் கணக்கில் குளம் என உள்ளது.
நடவாவி கிணற்றுக்கு மின் இணைப்பு கேட்டு விண்ணப்பம் செய்ததில், மின் இணைப்பு வழங்க வருவாய் துறை சான்று கேட்டபோது, அய்யங்கார்குளம் கிராம நிர்வாக அலுவலர் வழங்க மறுக்கிறார்.
எனவே, வருவாய் துறை வாயிலாக நிலப்பரப்பில் அமைந்தள்ள நடவாவி கிணற்றின் பரப்பளவை கண்டறிந்து, சஞ்சீவிராயர் கோவில் கணக்கில் சேர்க்கவும், மின் இணைப்பிற்கான தடையில்லா சான்று வழங்கவும் ஆவன செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.